Tuesday 5 May 2015

மே-5, காரல் மார்க்ஸின் 198-வது பிறந்த நாள் . . .

கனவாக இருந்த சோசலிசத்தை அறிவியலாக மாற்றினார் மாமேதை மார்க்ஸ் 
எல்லாக் காலங்களுக்கும் நிலைத்திருக்கின்ற பெரும் புகழ்மிக்க, அருஞ்செயல்கள் புரிந்த மாபெரும் மனிதர் களுக்கு மத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் மிகச்சிறப்பான தத்துவ ஆசிரியரும் தலைவருமான கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்பான இடத்தை வகிக்கிறார்.இயற்கை, சமூகம் மற்றும் மனித சிந்தனையின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற பொது விதிகளைப் பற்றி இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற போதனையைப் படைத்து அதன் மூலம் உலகத்தை இன்னும் சிறப்பான முறையில் அறிந்து கொள்வதுடன், அதைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் வழி காட்டியதனால் மார்க்ஸ் வரலாற்றுக்கு மிகப்பெரும் சேவை செய்திருக்கிறார்.முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் சமூகத்தின் வெற்றியும் தவிர்க்க முடியாதவை என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காட்டியதன் மூலம், மனித குலத்துக்கு இன்னும் சிறப்புமிக்க எதிர்காலத்தைப் பற்றி அதுவரையிலும் தெளிவில்லாத கனவாக மட்டுமே இருந்த சோஷலிசத்தை மார்க்ஸ் ஒரு விஞ்ஞானமாக மாற்றியமைத்தார். மார்க்ஸ் தன்னுடைய நண்பரான பிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்றுப் பாத்திரத்தை விஞ்ஞான ரீதியாக நிறுவினார். அதுவே மிகவும் வளர்ச்சியடைந்த, முற்றிலும் முரணில்லாத புரட்சிகரமான வர்க்கம், அது தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் ஒவ்வொரு வடிவத்திலிருந்தும் மனித குலம் அனைத்தையும் விடுவிக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலமாக சோஷலிச சமூகத்துக்கு முன்னேறும் பாதையை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய போதனை மார்க்சியத்தின் அடிப்படையான பகுதியாகும். பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்தப் பாட்டாளி வர்க்கக் கட்சியை அமைத்துக் கொண்டாலொழிய, முதலாளி வர்க்கத்துக்குச் சவக்குழி தோண்டுவது மற்றும் புதிய சமூகத்தை நிர்மாணிப்பது என்ற வரலாற்றுக் கடமையை அது நிறைவேற்ற முடியாது என்பதை மார்க்சிய மூலவர்கள் போதித்தார்கள்.மார்க்சின் போதனையே தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம், அதன் அடிப்படை நலன்களின் தத்துவ ரீதியான வெளியீடு; அது உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கின்ற விஞ்ஞானம்.மார்க்ஸ் வாழ்ந்த, பாடுபட்டுழைத்த, போராடிய காலத்தையும் நம்மையும் பிரிக்கின்ற வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால், புரட்சிகரமான வர்க்கப் போராட்ட நிகழ்வுப் போக்கில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் மீது அவருடைய போதனையின் தாக்கம் எப்படி வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை நாம் தெளிவாகக் காண முடியும்.உழைக்கின்ற, ஒடுக்கப்பட்டிருக்கின்ற பெருந்திரளான மக்கள் அனைவருக்கும் தலைமை தாங்குகின்ற மிக வளர்ச்சியடைந்த வர்க்கமான தொழிலாளி வர்க்கம் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் மென்மேலும் அதிகரிக்கின்ற தாக்கத்தைக் கொண்டிருக்கிறது; மார்க்சினால் கண்டுபிடிக்கப்பட்டு லெனினால் மேலும் விரிந்துரைக்கப்பட்ட சமூக வளர்ச்சி பற்றிய புறநிலை விதிகளை வழிகாட்டியாகக் கொண்டு உலகத்தை அதிகத் தீவிரமாக உணர்வுப்பூர்வமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.லெனினால் வளர்க்கப்பட்டு, உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளால் படைப்பாற்றலுடன் கையாளப்பட்டு, தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப்பட்டு, சோவியத் யூனியனிலும் மற்ற சோசலிச நாடுகளிலும் சோசலிச நிர்மாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மார்க்சின் போதனை அதன் மிகச்சிறப்பான தகுதியை மென்மேலும் நம்பிக்கையூட்டுகின்ற முறையில் நிரூபித்து வருகிறது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

காரல் மார்க்ஸின் நினைவினைப் போற்றுவோம்