Wednesday 6 May 2015

நாடாளுமன்றம்-ரியல் எஸ்டேட் மசோதா எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு மீண்டும் பணிந்தது மோடி அரசு.

ரியல் எஸ்டேட் துறையில் கார்ப்பரேட்டுகளுக்கு தாராள அனுமதிஅளிக்க வகை செய்யும் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் காரணமாக தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் மோடி அரசுக்கு ஏற்பட்டது.ரியல் எஸ்டேட் (திருத்த) மசோதா, செவ்வாயன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அவையில் இம்மசோதாவை அறிமுகம் செய்தவுடனேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடும்பிரச்சனைகளை உள்ளடக்கிய இம்மசோதா, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவையில் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற அலுவல் துறைஅமைச்சர் வெங்கய்யா நாயுடு வாக்குறுதி அளித்திருந்த நிலையில்,அதற்கு மாறாக, கலந்தாலோசிக்காமல் தாக்கல் செய்யப் பட்டதை எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டித்தன.அவையில் மசோதாவை அறிமுகம் செய்தவுடனேயே, சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால், எழுந்து இப்பிரச்சனையை எழுப்பினார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்தும் இணைந்து கொண்டார்.தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து குரல் எழுப்பினர். ஒட்டுமொத்த அவையும் எதிர்ப்பு தெரிவிப்பதை உணர்ந்த அரசுத் தரப்பு, மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டே ஆக வேண்டுமென வற்புறுத்தாமல் கைவிட்டது.அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்தப் பிறகே, மசோதாவை கொண்டு வர நினைத்ததாகவும், விடுமுறை நாட்கள் வந்துவிட்டதால் ஆலோசிக்க முடியாமல் போயிற்று என்றும் வெங்கய்யா நாயுடு அவையில் பேசி சமாளித்தார்.மே 13ம்தேதி கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னதாக, இம்மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதா, இல்லையா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஏற்கெனவே, ஏப்ரல் 29ம்தேதி இம்மசோதாவை முன்வைக்க அரசுமுயன்றது. அப்போதும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, முன்வைக்காமல் தள்ளிப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வீட்டுமனைகளை வாங்க முடியாத அளவிற்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் சூதாட்டக் களமாகரியல் எஸ்டேட் துறையை மாற்றுவதற்கே இந்த மசோதாவின் மூலம்மத்திய அரசு முயற்சிக்கிறது எனஎதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. (PTI)

No comments: