“என்ன.. பக்கத்து ஊர் தொழிற்சாலையில் வேலைக்குப் போகப்போகிறீர்களா..?”“ஆம்...”“நமது சாதிப்பெண்கள் அப்படிப் போகக் கூடாது..”“எங்களுக்கு வேறு வழியில்லை..”“அப்படியானால், தண்டனையும், அபராதமும் விதிப்போம்...”“நாங்கள் காவல் நிலையத்திற்குச் செல்வோம்...”
ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர்களுக்கும், கடன் வலையில் இருந்து மீள்வதற்காக வேலைக்குச் செல்வது என்று முடிவெடுத்த ஆறு பெண்களுக்கும் இடையில்தான் இந்த உரையாடல் நடந்துள்ளது.இதற்கு முன்பும் இது போன்று பெண்கள் வேலைக்குப் போக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்துக்காரர்கள் உத்தரவு போட்டவுடன் அதை மீற முடியாமல் இருந்து விட்டனர். முதன்முறையாக, உரிமைக்குரல் வலுவாக எழுந்திருக்கிறது. சொன்னதோடு நிற்காமல், காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டனர் அந்தப் பெண்கள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு அருகில் உள்ள பீப்லிகேடா என்ற கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
கீதா, பிரேம்வதி, ரேகா, ஒம்பிரி, சுமன் மற்றும் பிங்கி ஆகிய ஐந்து பெண்களும் “நாட்” என்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். கடுமையான வறுமையினால் அவர்களின் குடும்பங்கள் உழன்று வருகின்றன. இவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல, அங்குள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கும் இதே நிலைமைதான். கந்துவட்டிக்காரர்களை நம்பியே இந்தக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றன. வாங்கும் கடனுக்கு வட்டியைத் தர முடியாவிட்டால் ஊரிலேயே கந்துவட்டிக்காரர்கள் சொல்லும் வேலையைச் செய்யும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
தலைக்கு மேல் கடன் வெள்ளம்
இவர்கள் வாங்கும் கடனுக்கு கிட்டத்தட்ட 120 சதவிகிதம் வட்டி விதிக்கப்படுகிறது. ஒருமுறை கடன் வாங்கிவிட்டால், நிரந்தரமாக கடனாளியாகவே ஒட்டுமொத்தக் குடும்பமும் வாழ்க்கையைக் கழிக்கிறது. மற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பணம் படைத்தவர்களின் கட்டுப்பாடுகளுக்கு அடங்கிப் போகையில் இந்த ஆறு பெண்கள் மட்டும் அதை மீற முடிவெடுத்தனர். சட்ட விரோதக் கட்டுப்பாடுகளை சாதிக்கட்டுப்பாடு என்ற போர்வையில் பணக்காரர்கள் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களும் அதே சாதியைச் சேர்ந்தவர்கள்தான்.
அனைத்து ஏழைகளும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையே அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். தனது மகள் திருமணத்திற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் கடனை யஷ்பாலும், அவரது மனைவியான பிரேம்வதியும் வாங்கினர். தொடர்ந்து வேலை செய்ய முடியாத அளவுக்கு யஷ்பாலின் உடல்நிலை மோசமாக இருந்தது. “இதனால்தான் நான் வேலைக்குப் போக முடிவு செய்தேன்” என்கிறார் பிரேம்வதி. மற்றொருவரான ரேகாவின் குடும்பம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தது. அதில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே திருப்பிக் கட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் ரேகாவின் கணவர் சோம் பால் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது.
இதனால் ரேகாவும் வேலைக்குப் போக முடிவெடுக்கிறார். உள்ளூரில் கந்துவட்டிக்காரர்கள் தரும் வேலைக்குச் சென்றால், நிரந்தரமாக கடனாளியாகவே இருக்க வேண்டும் என்று கருதி இந்த இருவரும் தங்களின் மற்ற நான்கு தோழிகளோடு பக்கத்து ஊரில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்ய முடிவெடுக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்த ஆறு பேரின் குடும்பங்களும் 3 லட்சம் ரூபாய்க்கு கடன்பட்டுள்ளனர்.
“அடிமைகளாக இருக்க மாட்டோம்”
பக்கத்து ஊருக்கு வேலைக்குச் செல்லாமல் எங்களிடமே கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பஞ்சாயத்தினர் சொன்னபோது, “நாங்கள் வாழ்க்கை முழுவதும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. வாழ்க்கை முழுவதும் வேலை செய்தாலும், கடைசி வரையில் கடனைக் கட்ட முடியாமல் போனவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று பதில் சொல்லியிருக்கிறார் பிரேம்வதி. தங்கள் செல்வாக்கால், பெண்களையும், அவர்களின் குடும்பங்களையும் புறக்கணிப்பு செய்யுமாறு பஞ்சாயத்தை கந்துவட்டிக்காரர்கள் ஏவிவிட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள 200 குடும்பங்களில் யாரும் இவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஊர் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.“தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று கருதி கந்துவட்டிக்காரர்கள் எங்களைத் தடுக்கிறார்கள்” என்கிறார் கீதா. “நாங்கள் அவர்களிடம் கடன் பட்டிருப்பதால், பெண்கள் வேலை செய்வதை கந்துவட்டிக் காரர்கள் விரும்பவில்லை. அவ்வாறு வேலை செய்து வருமானம் ஈட்டினால், சொந்தக்கால்களில் நாங்கள் நின்று விடுவோம் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார் பிரேம்வதி.
அதோடு நிற்காமல், பாலியல் ரீதியான தொழிலை இந்தப்பெண்கள் செய்கிறார்கள் என்ற வதந்தியையும் கிளப்பி விட்டுள்ளனர். ஊர் பஞ்சாயத்தாரிடம் இப்படி செய்தியைப் பரப்புகிறீர்களே.. உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று தைரியமாக அந்தப் பெண்கள் கேட்டிருக்கிறார்கள். இப்படி வந்து கேட்பார்கள் என்று எதிர்பார்க்காத பஞ்சாயத்தினர், முழி, முழி என்று முழித்திருக்கிறார்கள். இவர்களைப் போன்று வெளியில் வராவிட்டாலும், ஊரில் உள்ள பெண்களில் பலர் இவர்களிடம் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்று ஒரு வேலைத்திட்டம் இருப்பதே இந்த ஊர் மக்களுக்குத் தெரியாது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் தகவலாகும்.
No comments:
Post a Comment