Tuesday, 18 August 2015

செப்.2 வேலை நிறுத்தம் 1.63 லட்சம் ம.அ. ஊழியர்கள் பங்கேற்பு

சென்னையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்ளேனத்தின் பொதுச் செயலாளர் M. துரைபாண்டியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழு அறிக்கை எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சரும் பத்திரிகைகள் மூலம் ஒரு செய்தியை இம் மாதம் 13 ம் தேதி வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி சம்பளமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். அது இனி ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடியாக மாறும் என்று தெரிவித்துள்ளார். இந்த புள்ளி விபரங்களில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இருந்தாலும், எங்களுக்கு இரண்டு சந்தேகங்கள் வருகிறது.முதலாவது, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு ஏற்கெனவே, அறிக்கையை அரசிடம் காட்டிவிட்டதோ? மற்றொன்று, நாங்கள் கேட்டிருப்பது 40 விழுக்காடு சம்பளம் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், வெறும் 15.6 விழுக்காடு மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஊதியக்குழு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துவிட்டதோ? என்கிற சந்தேகமும் உள்ளது. அஞ்சல் அட்டையின் உற்பத்தி செலவு 6 ரூபாய் 50 பைசா. ஆனால், 50 பைசாவுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கான மானிய தொகையை மத்திய அரசு கொடுத்ததே இல்லை.
இந்த நட்டத்தை தாங்கிகொண்டுதான் இத்துறை சிறப்பாக சேவை செய்துவருகிறது.அரசு அலுவலங்களில் பெரும்பாலான பணிகள் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படை என்ற பெயரில் தனியாருக்கு கொடுத்துவருகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில், ஒன்றரை லட்சம் மத்திய அரசு ஊழியர்களாகிய நாங்களும் தமிழக அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரும் முழுமையாக கலந்துகொள்கிறோம். இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட வேலைநிறுத்த தயாரிப்பு மாநாடு சென்னையில் ஜெர்மன் அரங்கில் ஆக.18 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. அதில், மத்திய-மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.... 

No comments: