Tuesday 18 August 2015

சுதந்திர தினவிழாவில் மோடியின் தந்திர உரை-கண்ணோட்டம்.

இந்தியாவில் குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தன்னுடைய வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பிரதமர் நரேந்திர மோடி பெருந்தன்மையாக ஒருநாள் ஒதுக்கி சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருக்கிறார். கொடியேற்றி வைத்த கையோடு அபுதாபி புறப்பட்டுச் சென்றுவிட்டார். பாஜகவினரின் ஊழல் விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் முற்றாக முடங்கிய நிலையில் வாய்திறக்க மறுத்த பிரதமர் மோடி அபுதாபி சென்று எதிர்க்கட்சிகளை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொட்டுவது போல பிரதமர் மோடி வாயை திறந்தாலே பஞ்ச் டயலாக் கொட்டுகிறது. இதற்கென்றே ரூம் போட்டு யோசிப்பார் போலிருக்கிறது. கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று ஏற்கெனவே இவர் கொட்டிய வார்த்தைகள் சுற்றிலும் உதிர்ந்து கிடக்க சுதந்திர தின உரையில்ஸ்டார்ட் அப் இந்தியா; ஸ்டாண்ட் அப் இந்தியாஎன்று புதிய வாசகத்தை உதிர்த்துள்ளார்.இதைக் கேட்டால் ஏதோ மோட்டார் சைக்கிளை கிளப்பி பிறகு, நிறுத்துவது போல உள்ளது.ஜாதியம், வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்று சுதந்திர தின உரையில் மோடி முழங்கியிருக்கிறார். ஒரு படத்தில் நடிகர் வடிவேலு `பி கேர் புல்என்று சொல்வார். எதிரிகள் முறைத்தவுடன்என்னைச் சொன்னேன்என்று மாற்றுவார். உண்மையில் மோடி தன்னையும், தன்னுடைய கட்சியினரையும் பார்த்துத்தான் இந்த வார்த்தைகளை சொல்லிக்கொள்ள வேண்டும்.இந்தியாவின் வலிமை எளிமைதான் என்றும் பிரதமர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியா வந்தபோது தன்னுடைய பெயரை கோட் முழுவதும் எழுதி வைத்துக் கொண்டு லண்டனில் ரூ.15லட்சம் செலவில் தைத்து போட்டுக் கொண்ட கோட் ஏனோ ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.‘டீம் இந்தியாஎன்ற புதிய வார்த்தையையும் மோடி தனது உரையில் கூறியுள்ளார். இந்த டீமில் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா, லலித் மோடி, சிவராஜ் சிங் சவுகான், பங்கஜா முண்டே, அதானி, அம்பானி போன்றவர்களுக்குத்தான் இடமிருக்கும் போலிருக்கிறது.தேர்தல் பிரச்சாரத்தில் கருப்புப் பணத்தை கண்டுபிடித்து, இந்தியா கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 3 லட்சம் போடுவேன் என்றார் மோடி. ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் ஒரு நயா பைசா கூட இந்தியா வரவும் இல்லை; யாருடைய கணக்கிலும் வரவு வைக்கப்படவும் இல்லை. ஆனால் தற்போதும் கூட மோடி கூச்சப்படாமல் கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.அநேகமாக அடுத்த சுதந்திர தின உரையிலும் இதையேதான் கூறுவார். பேச்சை மாற்றிப் பேசும் பழக்கம் அவருக்கு இல்லை.நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் பதவியில் உள்ளவர்களிடமிருந்து அந்த முயற்சியை தொடங்கவேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் எல்பிஜி சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும்பஹல் திட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் ஏராளமானோர் மானியத்தை விட்டுக் கொடுத்து அரசுக்கு 15 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது என்றும் மோடி கூறியுள்ளார். கேஸ் புக் செய்ய செல்போனைத் தொட்டாலே மானியத்தை விட்டுவிடடிவை அழுத்தவும் என்று பெருங்கூச்சல் கேட்கிறது. யாராவது தவறுதலாகடிவை அழுத்தினால் அத்துடன் மானியம் பணால். இந்த திட்டத்திற்கு `பணால் திட்டம்என்றுகூட பெயர் வைக்கலாம். அங்கன்வாடி உள்ளிட்ட மதிய உணவு மையங்களுக்கு தரப்படும் கேஸ் மானியத்தையும் வெட்டமோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏழை, எளிய பள்ளிப் பிள்ளைகள் வயிற்றிலடித்து சேர்க்கப்படும் இந்தத் தொகையையும் சேர்த்தால் மிச்சமான தொகை இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு.கடந்த 15 மாதங்களாக நடைபெறும் ஆட்சியில் ஒரு ஊழல் புகார் கூட எழாதவாறு ஆட்சி செய்துள்ளதாக மோடி கூறியுள்ளார். லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் என பாஜகவினரின் ஊழலால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்து விட்ட நிலையில், இப்படிக் கூறவும் 56 இஞ்ச்க்கு மன தைரியம் வேண்டும்.இந்தியாவை முன்னேற்ற என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது என்று மோடி முன்பு கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக திட்டக்குழுவை ஒழித்துக் கட்டினார். தற்போது விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக வேளாண் அமைச்சகத்தின் பெயரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப் போவதாக மோடி அறிவித்திருக்கிறார். இனிமேல் விவசாயிகள் நலனுக்காக மோடி அரசு எதுவும் செய்யவில்லை என யாரும் நாக்கில் பல் போட்டு சொல்லிவிட முடியாது. அதுதான் விவசாயிகள் நலத்துறை என்று பெயர் வைத்தாகிவிட்டதே. விவசாயிகள் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதை மோடி கண்டிக்கவே இல்லை. நல்லவேளை, விவசாயிகள் காதல் நலத்துறை என்று பெயர் வைக்காமல் விட்டார்கள்.மோடி தனது உரையில் கடைசியாக, அரசு ஆரம்பித்த ஜன் தன் திட்டம் மூலம் 17 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப் பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். வங்கிக் கணக்கு துவக்கியது மக்களுக்காக அல்ல; அரசு வருவாய்க்காகவே என்று இப்போது தெளிவாகிவிட்டது. - மதுரை சொக்கன்

No comments: