Thursday 6 August 2015

ஆகஸ்ட்-6,சடாகோ சசாகியும் ஹிரோசிமா நாகசாகியும்.

சடாகோ சசாகி இன்று உலகம் முழுக்க நேசிக்கப்படுகிறாள். போரின் கோர முகத்தை நினைவுபடுத்துபவளாய் உள்ளாள். எங்கெல்லாம் அமைதி குறித்து பேசுகிறோமோ அங்கெல்லாம் கூடவே வருகிறாள். 75 ஆண்டுகாலமாக மரண பயமும், மறக்க முடியாத சோகமும் இன்றும் தொடர்கிறது. அதன் சாட்சியாக சிலையாகிப் போனவள் சடாகோ. ஆம் குழந்தைகளே... இந்தச் சோகக் கதையை நாம் பகிர்ந்து கொள்வோம்... கதை அல்ல நிஜமான வரலாறு.சடாகோ சசாகி அழகிய சிறுமியின் பெயர். ஜப்பான் நாட்டில் ஹிரோசிமா நகரில் 1943 ஜனவரி 7ல் பிறந்தவள். மகிழ்ச்சியோடு இந்த பூவுலகில் அடியெடுத்து வைத்தாள்.அவள் வீடு ஹிரோசிமாவின் மிசாசா பாலத்திற்கு அருகில் இருந்தது. சடாகோவிற்கு இரண்டு வயது இருக்கும். அப்போது அவளுக்கு என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாது. தன் உயிர் சிறிது காலத்தில் பறிபோகப் போகிறது என்பதை அறியாத பிஞ்சுக் குழந்தையாக இருந்தாள். அப்பொழுதுதான் அந்த துயரமான சம்பவம் நடந்துவிட்டது. யாரும் நினைத்துப் பார்த்திடாத ஈவு இரக்கமற்ற சம்பவம் நடந்துவிட்டது. ஆம் குழந்தைகளே...! இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நாட்டை சரணடையச் செய்வதற்காக அமெரிக்கா அணுகுண்டை வீசியது.
லிட்டில்பாய், பேட்மேன்
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம்தேதி காலை 8.30 மணிக்கு எனாலாகே என்ற போர் விமானத்தில் இருந்து ஹிரோசிமாவில் அணுகுண்டை வீசினார்கள். அந்த அணுகுண்டின் பெயர் லிட்டில்பாய். ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகியில் வீசினார்கள. இந்த அணுகுண்டின் பெயர் பேட்மேன். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த நிலையில் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. தான் செய்த அணுகுண்டை பரிசோதித்துப் பார்க்கவே அப்பாவி மக்களின் மீது அணுகுண்டை வீசியது. அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. நகரத்தின் 2000 அடிகளுக்கு மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன.ஜப்பான தான் வல்லரசாகும் நினைவில் போரில் குதித்தது. அமெரிக்கா அதை முறியடித்து உலகில் தன்னை வல்லரசாகும் நினைவில் போரில் குதித்தது. அமெரிக்கா அதை முறியடித்து உலகில் தன்னை வல்லரசாகக் காட்டிக்கொள்ள அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டு வீச்சில் ஹிரோசிமா நகரில் 1,60,000பேரும், நாகசாகியில் 80,000பேரும் கொல்லப்பட்டனர். அணுகுண்டில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சு அனைவரையும் ஒரே நொடியில் சாம்பலாக்கியது. தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள். அலுவலகத்திற்குப் போனவர்கள், வீட்டில் இருந்தவர்கள், வெளியில் பயணம் செய்தவர்கள், பெண்கள், பிஞ்சுக் குழந்தைகள் என அனைவரும் அணுகுண்டிற்குப் பலியானார்கள். இதில் இறந்தவர்கள் ஒருவர் கூட போர் வீரர்கள் இல்லை. அனைவரும் அப்பாவி மக்கள். அனைவரும் தீக்காயங்களாலும், கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்கள். இதில் உயிர் தப்பியவள்தான் சடாகோ சசாகி. இவள் வீடு குண்டு விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் இருந்தது. குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே தூக்கி எறியப்பட்டாள் சடாகோ. சடாகோவின் அம்மா பதறித்துடித்தாள். ஓடிவந்து குழந்தையைத் தூக்கினாள். குழந்தை உயிரோடு இருந்தாள். கட்டித் தழுவிக் கொண்டாள். அவளைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அழகிய நகரம் அழிந்துவிட்டது. ஒரே நொடியில் சமாதியாகிவிட்டது. வேறு எங்கே செல்வது என்று யோசித்தாள். அருகில் இருந்த மியோசி நகருக்குச் சென்றாள். தனது உறவினர் வீட்டில் தங்கினார்கள். மற்ற குழந்தைகளைப் போலவே சடாகோவும் வளர்ந்தாள். தனது சிறுவயதிலேயே ஓட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என கனவு கண்டாள்.
அணுகுண்டு நோய்
சடாகோவிற்கு 11 வயது. சோதனை துவங்கிவிட்டது. நன்றாக ஓடியாடிய விளையாடிய குழந்தை சோர்வுற்றாள். சடாகோவின் காதுகளிலும், கழுத்திலும் சிறு வீக்கங்கள் ஏற்பட்டன. ஒரு சில மாதங்களில் கால்களில் ஊதா நிறப்புள்ளிகள் ஏற்பட்டன. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். சடாகோவிற்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னார்கள். அவளது அம்மா இதை அணுகுண்டு நோய் என்றார். 2 வயதில் அணுகுண்டு கதிர்வீச்சினால் ஏற்பட்ட விளைவு. பல ஆண்டுகளுக்குப் பிறகு சடாகோவை பாதித்துவிட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். மருத்துவமனைக்குத் தோழிகள் பார்க்க வந்தார்கள். அதில் சிசுக்கோ ஹமாட்டோ என்ற தோழி தங்கநிறக் காகிதத்தில் கொக்கு ஒன்றை உருவாக்கிக் கொடுத்தாள். காகிதத்தில் வடிவம் செய்வதை ஒரிகாமி என்பார்கள். ஒரிகாமி ஜப்பான் நாட்டின் பிரபலமான கலைகளில் ஒன்றாகும். நம் ஊரில் காகிதக் கலை என்று சொல்கிறோம். 1000 காகிதக்கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பான் மக்களின் நம்பிக்கை. அதனால் தோழிகள் சடாகோவை கொக்கு செய்யச் சொன்னார்கள். விரைவில் நோய் குணமாகும் என்றார்கள். சடாகோவும் கொக்குகள் செய்யத் துவங்கினாள். அவளால் 644 கொக்குகள் மட்டுமே செய்ய முடிந்தது. 1955 அக்டோபர் 25ல் ரத்தப் புற்றுநோயால் இறந்தாள்.
ஆயிரமாயிரமாய்... அமைதி கொக்குகள்
இளம் வயது எத்தனை எத்தனை கனவுகள் இருந்திருக்கும். எந்தப் பாவமும் செய்யாத சடாகோ சசாகி பரிதாபமாக இறந்து போனாள். எல்லோரும் கதறி அழுதார்கள். அவளது பள்ளித் தோழர்கள் இணைந்து 1000 கொக்குகளை உருவாக்கினார்கள். அவளது உடலுடன் சேர்த்துப் புதைத்தார்கள். அனைவரும் கண்ணீர் மல்க விடைகொடுத்தார்கள். பள்ளித் தோழர்களும் ஜப்பானில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் இணைந்து நிதி திரட்டி ஹிரோசிமாவில் 1958ல் சடாகோவிற்கு அமைதிப் பூங்காவைத் திறந்தார்கள். அமைதிப் பூங்காவில் சடாகோவிற்கு சிலை அமைத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி சடாகோ சிலை அருகே லட்சக்கணக்கான கொக்குகளைச் செய்து வைக்கிறார்கள் அமைதி தினமாகவும் அனுசரிக்கிறார்கள்.உலக வரலாற்றில் அணுகுண்டைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும். அணுகுண்டின் தாக்கத்தால் இன்று வரை ஜப்பான் மக்கள் நோயினால் அவதிப்பட்டும் இறந்தும் வருகிறார்கள். 1945இன் துயரம் இன்றும் தொடர்கிறது. ஜப்பான் இந்த சம்பவத்திற்குப்பின் அணுகுண்டு தயாரிக்கவும், உள்ளே அனுமதிக்கவும் மாட்டோம் என உறுதிபூண்டுள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் அணுகுண்டுகள் இல்லை. ஆனால் ஒரு சில நாடுகளில் ஏராளமான அணுகுண்டுகள் உள்ளன. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம். ஒன்றைத் தலைமை எனத் துவங்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். எனவே பல நாடுகள், பல மதங்கள், பல கலாச்சாரம் என அனைத்தும் இணைந்த கதம்பமாகக்கூடி வாழ வேண்டும். ஏற்றத்தாழ்வு அற்ற சமூகமாகவும், அனைவருக்குமான சமூகமாகவும் இருக்க வேண்டும்.ஆகஸ்ட் 6, 9 நினைவு நாளாக மட்டுமல்லாமல் அமைதிக்கான நாளாகவும் அனுசரிப்போம். அமைதிக் கொக்குகள் தேசமெங்கும் பறக்கட்டும்.நாம் விரும்புவது சமாதானத்தை சமாதியை அல்ல. நமக்கு அணுகுண்டுகள் வேண்டாம்... அமைதி வேண்டும்....- நன்றி: துளிர், (ஆகஸ்ட் 2015)

No comments: