Saturday, 1 August 2015

இரங்கல்-நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத மதுக்கடை.

காந்தியவாதியும், மதுவிலக்கு ஆர்வலருமான சசிபெருமாள் (59), கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்திய போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். பூரண மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து மது இல்லாத தமிழகம் உருவாவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் சசி பெருமாள் அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். குறிப்பாக 2013ல் சென்னையில் காலவறையற்ற பட்டினி போராட்டத்தை நடத்தினார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதான பின், சிறைக்குள்ளும் உண்ணா நோன்பைத் தொடர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதையும் இந்த ஒற்றைக் கோரிக்கையை மையப்படுத்திய போராட்டங்கள் சூழ்ந்ததாகவே அமைத்துக் கொண்டார்.போதைப் பழக்கத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் போன்ற அரசியல் இயக்கங் கள், மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி, வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தேசித் துள்ளன.இச்சூழலில், சசி பெருமாள் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். போராட்டக் களத்திலேயே உயிர் நீத்த சசி பெருமாள் அவர்களின் கனவானமதுவற்ற தமிழகம்உருவாகத் தொடர்ந்து போராடுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.இத்தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் BSNLEU மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது
உண்ணாமலைக்கடையில், கோயில், பள்ளிக்கூடம், பேருந்துநிலையம் ஆகியவற்றின் அருகில் அரசு மதுபானக் கடை இருப்பதால், இதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், 3 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டம் நடக்கும் ஒவ்வொரு முறையும், கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி அளிப்பார்கள். பின்னர் அதை மறந்து விடுவார்கள். இதன்காரணமாகவே உண்ணாமலைக்கடை பொதுமக்கள், கடந்தாண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்ணாமலைக்கடை அரசு மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டுமென, கடந்த 2014-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதமே உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு போடப்பட்டு ஒன்றரைஆண்டுகளாகியும் மதுக்கடை அகற்றப்படவில்லை
கடந்த ஜூன் 30-ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டுக்குழு சார்பில் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிக்கப் பட்டது. இந்த போராட்டத்திலும் காந்தியவாதி சசிபெருமாள் கலந்து கொண்டார். அப்போதும் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் வழக்கம்போல 15 நாளில் கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், 30 நாட்களாகியும் கடை அகற்றப்படவில்லை. இதன்காரணமாகத்தான் வெள்ளிக்கிழமையன்று 31-ஆவது நாளில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் சசிபெருமாள் தனது உயிரையே பறிகொடுக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டது.

No comments: