Saturday 29 November 2014

29.11.14 - கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் . . .

தமிழ் திரைப்படத்துறையில்கலைவாணர்என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்புஎன்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறுஅவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளநாகர்கோவிலுக்குஅருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்குகலைவாணர்என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
மறைவுநகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்எனப் பெயர் சூட்டியது.தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.

2 comments:

Ganesan , Dist vice President , Palani said...

தோழர் !
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிரிப்பு சிந்தனையாளர் குறித்த மிக அருமையான கட்டுரை !
நமது பிளாக்கில் வரும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் நிலையாக சேமித்து வைக்கப்பட வேண்டியவை !
தொழிற்சங்க செய்திகளைத் தாண்டி இப்படிப்பட்ட சமுதாய நலன் சார்ந்த கட்டுரைகளை வெளியிட தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளின் தீவிரம் நிச்சயமாகப் பாராட்டப் படவேண்டியது !
வாழ்த்துக்கள் தோழரே !

:: கணேசன் மாவட்டத் துணைத்தலைவர் .

கரந்தை ஜெயக்குமார் said...

கலைவாணர் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்