மாநாட்டில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசுகிறார். அருகில் க.சுவாமிநாதன், எம்.கிரிஜா உள்ளிட்ட தலைவர்கள்.
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ‘இன்சூரன்ஸ் அந்நிய முதலீடு எதிர்ப்பு மாநில சிறப்பு மாநாடு’ திருச்சியில் செவ்வாயன்று காலை நடந்தது. மாநாட்டிற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ துவக்கி வைத்துப் பேசுகையில், கூறியதாவது: இந்திய சுதந்திர போராட்டம் என்பதுஅந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பானபோராட்டம் ஆகும். அந்நிய முதலீட்டை நிலை நிறுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் அங்கிருந்து இங்கு வந்து பாடுபட்டார்கள். ஆனால் இன்று அந்நிய முதலீட்டிற்காக இங்கு உள்ள ஆட்சியாளர்களே பாடுபடுகிறார்கள் என்பதுதான் வேதனை.அந்நிய நேரடி முதலீடு தான் ஒரு நாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் என்ற ஒரு வாதம் உள்ளது. அந்நிய முதலீட்டை இந்தியாவில் நிலை நிறுத்தி கொள்வதற்காக அங்கிருந்து இங்குள்ள ஆட்சியாளர்களை தூண்டிவிட்டு செயல்படுத்துகிறார்கள். அந்நிய முதலீட்டிற்கு எதிராக இன்று எல்லா நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த கொள்கைக்கு எதிராக சாதாரண ஏழை, எளிய மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அந்நிய நாடுகளுக்கு காப்பீட்டு துறையில் தடம் பதிக்க இங்கு இடமில்லை என்று சொல்ல வேண்டும். அப்படி சொல்லத் திராணி இல்லாமல் நம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.எல்ஐசி ஊழியர்கள் நடத்துகின்ற போராட்டம் எல்ஐசிக்காக நடத்துகிற போராட்டம் அல்ல இந்தியாவிற்காக - இந்திய மக்களுக்காக நடத்துகின்ற போராட்டம். அந்நிய முதலீட்டை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால் மக்கள் நலன்சார்ந்த நிபந்தனைக்கு உட்பட்டு தான் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டில் பத்திரிகையாளர் சமஸ், ஏஐஐஇஏ இணைசெயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் பேசினர்.மாநாட்டில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட நாசத்திற்கு வழிகோலும் இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக ஐசிஇயு தஞ்சைக்கோட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணைசெயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் க.சுவாமிநாதன், எம்.கிரிஜா ஆகியோர் கூறியதாவது:இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை 26 சதவீதத்திலிருந்து 49
சதவீதமாக அதிகரித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. மேலும் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றிட உள்ளதாகவும் தெரிவித்தது.இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சியை மத்திய அரசு ஒட்டு மொத்தமாக கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி நீதிபதிகள் உள்பட பலஅறிஞர்களிடம் கையெழுத்து பெற்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனங்களை அரசு காக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் அந்நியமுதலீட்டை அனுமதித்தால் அது பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கு துணைபோவதாக அமையும்.
No comments:
Post a Comment