Saturday, 8 November 2014

கத்தி திரைப்படம் – முதல் பார்வை …

கார்ப்பரேட் கம்பெனியால் நேர்மையற்ற விதத்தில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலத்தையும், அசுரத்தனமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரையும் காப்பாற்ற ஒரு இளைஞன் எடுக்கும் முயற்சிதான் கத்தி.
இரட்டை வேடத்தில் கதாநாயகன், ஆள் மாறாட்டம், காதல் காட்சிகள், பாடல்கள், ஹீரோயிசச் சண்டைக் காட்சிகள், வழக்கமாக வருவது போன்றே பொம்மை மாதிரி வந்து போகிற கதாநாயகி என பழைய கத்திதான், கொஞ்சம் சாணை தீட்டித் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
கம்யூனிசம்னா என்னண்ணே? புரியிற மாதிரி ஒரே வரியில சொல்லுங்க என்று கேட்கும் தங்கையிடம், அண்ணன் விஜய்பசி தீர்ந்ததுக்கப்புறமும் நாம சாப்பிடுற அந்த இன்னொரு இட்லி இன்னொருத்தங்களோடதுஎன்று சொல்வது போன்ற வசனங்களுக்காக நிச்சயம் இயக்குநரை பாராட்டலாம். சராசரி ரசிகனுக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் அமைந்துள்ள வசனங்கள் பாராட்டுக்கு உரியவை. தண்ணீருக்காக அல்லாடும் ஒரு கிராம மக்கள் தங்கள் தேவைக்கான தண்ணீருக்காய் அரசாங்கத்திற்கு மனு போட்டு காத்திருந்து அதில் பலனின்றிப் போக, தாங்களாகவே முன் வந்து ஒரு வாய்க்கால் வெட்டத் தொடங்குகின்றனர். வாய்க்காலின் கடைசி கட்டத்தில் அரசாங்கம் தலையிட்டு வாய்க்காலை கைப்பற்றிக்கொள்ளுவதாக எடுக்கப்பட்டதண்ணீர் தண்ணீர்திரைப்படம், கார்ப்பரேட் ஆதிக்கத்தின் விளைவாக விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயல்வதையும், அதை கேள்விப்படும் ஊடகங்கள் நேரலையாக தற்கொலையை ஒளிபரப்பி காசுபார்க்கும் முயற்சியில் இறங்குவதையும், கடைசியில் அந்த விவசாயி தன் நிலத்தை இழந்து, இடம்பெயர்ந்து கட்டிட தொழிலாளி ஆகிவிடுவதையும் காட்சிப்படுத்தியபீப்ளி லைவ்ஆகிய இவ்விரு படங்களும் மிக யதார்த்தமான காட்சியமைப்புகளுடன் எடுக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் பிரச்சனையை மிகவும் ஆழமாகப் பேசின. ஆனாலும், அந்தப் படங்கள் வெகுமக்களைச் சென்றடைய முடியவில்லை.
கத்தி திரைப்படம்விவசாயிகள் பிரச்சனையை பேசுவதற்காக பாராட்டப்பட வேண்டியது. கொஞ்சம் இழுவையான திரைக்கதை என்றாலும் நிறைய பேசியிருக்கிறார் இயக்குனர். இந்தியாவுல ஒவ்வொரு 30 நிமிஷத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை பண்ணிட்டு சாகுறான், தாமிரபரணி ஆத்துல இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணிய கார்ப்பரேட் கம்பெனிகாரன் உறிஞ்சுறான், மீத்தேன் வாயு எடுக்கிறேங்கிற பேர்ல விவசாய நிலத்தை எல்லாம் பாழ்படுத்துறான், 5000 கோடி பேங்க்ல கடன் வாங்கின கார்ப்பரேட் பீர் கம்பெனி ஓனர் கட்ட முடியாதுன்னு கைய விரிக்கிறான், 5000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி தற்கொலை பண்ணிட்டு சாகுறான்பணக்காரன் யூஸ் பண்ற காண்டம்ல ஸ்ட்ராபெரி ஃப்ளேவர் சேர்க்கிறான்னா, ஏழைக்குழந்தைங்க எல்லாம் ஸ்ட்ராபெரிய நெனைச்சி பார்க்க முடியுமா, ஷாம்பூவும் இன்ன பிற அழகுசாதன பொருட்களும் தயாரிக்கிறதுக்காக முட்டையும், உணவுப் பொருட்களையும் பயன்படுதினான்னா இந்தியாவுலதான் அதிகமான குழந்தைங்க சத்துக்குறைவா ஏன் இருக்காது, 2G ஸ்பெக்ட்ரம் காத்துலயே ஊழல் பண்ணினாங்க போன்ற வசனங்களுடன் வணிக சமரசங்களுக்காக, கொஞ்சம் உப்பு காரம் தூக்கலாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஊடாக சொல்லப்படும் செய்தி வெகு ஜன ரசிகர்களைச் சென்றடையுமென்றால் அதனைப் பாராட்டலாம்.
ஆனால் இதையெல்லாம் பேச எந்த தாமிரபரணியில் ஒரு நாளைக்கு 9 லட்சம் தண்ணீரை உறிஞ்சி கோக் தயாரிக்கப்படுகிறதோ அந்த கோக்கின் விளம்பரதாரராக இருந்த விஜய்-க்கு அருகதை இருக்கிறதா? கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமாவில் வலுவாக காலை ஊன்றி நம் பாக்கெட்டுகளை காலி செய்ய துவங்கி விட்ட காலகட்டத்தில், அதே கார்ப்பரேட் கம்பெனிக்கு படம் எடுத்து கொடுத்து பணம் சம்பாதிக்க வழிவகை செய்யும் இயக்குநர் . ஆர். முருகதாசுக்கு அருகதை இருக்கிறதா? என்ற கேள்விக்கு திரைப்படத்தில் பதில் இல்லை.
ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளியே தெரு தாதா மாதிரி நேரடியாக கோதாவில் இறங்கி ஹீரோவுடன் நேருக்கு நேர் சண்டை போடுவது, கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகள் ஒரே ஒரு கதாநாயகனை தீர்த்துக் கட்ட அரதப் பழசான காலத்திய பாணியில் கூட்டம் போட்டு பேசுவது, இறுதிக் காட்சிகளில் விவசாயத்தை அழித்த கார்ப்பரேட் கம்பெனி முதலாளி, ஏர், கலப்பை, மாட்டு வண்டி, அதன் சக்கரம் உள்ளிட்ட விவசாய பொருட்களையெல்லாம் அவரின் மல்டி நேஷனல் கம்பெனியின் க்ரவுண்ட் ஃப்ளோரில் கொட்டி வைத்திருப்பது போன்ற மொன்னையிலும் மொன்னையான அபத்தமான காட்சிகள் படத்தில் ஏராளம். இதுவெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் அதன் முதலாளிகள் குறித்தான இயக்குநரின் புரிதல் என்றால் நகைப்புக்கு உரியது.
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை அம்பலப்படுத்தும் கதாநாயகன், கார்ப்பரேட் மயத்தால் பாதிக்கப்படும் ஒரு கிராமம், முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்யவே நீதிபதி, கலெக்டர், காவல்துறை, வணிக நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வெகு ஜன போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஊடகங்களின் வேடம் போன்றவற்றை அம்பலப்படுத்தியமைக்கு கத்தி திரைப்படக் குழுவினரைப் பாராட்டலாம்.
கத்தி சொல்ல வந்த விஷயம் பாராட்டுதலுக்குரியது, சொல்லப்பட்ட விதம் மாறவேண்டியது. அது இன்றைய சினிமா படைப்பாளிகள் பாமர ரசிகர்கள் குறித்து வைத்திருக்கும் அபத்தமான புரிதலை மாற்றுவதுடன் தொடர்புடையது.

1 comment:

மதிகண்ணன் said...

Please see also this link.
http://maanudaviduthalai.blogspot.in/2014/10/blog-post.html