Wednesday, 5 November 2014

கிராமப்புற ஏழைகளுக்காக ஓர் எளிய முதல்வரின் கடிதம்...

அன்புள்ள நரேந்திரமோடி சாகேப் -தங்கள் உண்மையுள்ள மாணிக்சர்க்கார் முதலமைச்சர், திரிபுரா
1.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் 2005ல் நாடாளுமன்றத்தில் ஏழைகளுக்கும் நலிவடைந்த பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அருகாமையில் வேலைவாய்ப்புகள் அளிப்பதன் மூலம் சமூக பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் சுரண்டப்படுவதை தடுக்கவும் இயற்றப்பட்டது. இது ஏழைகளுக்கும் தேவையான நபர்களுக்கும் அரசிடமிருந்தும் வேலை கோருவதற்கு அளிக்கப்பட்ட உரிமையாகும்.கிராமத்திலுள்ள மக்கள் வேலைவாய்ப்பு கோரிய 15 நாட்களுக்குள் மாநில அரசாங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்க கடமைப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பட்ஜெட் ஒதுக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டோ அல்லது மற்ற வரம்புகளைக் கொண்டோ (சட்டத்தின் பிரிவு 2(1) அல்லது மற்ற வரம்புகளைக் கொண்டோ அரசின் பொறுப்பை மறுக்க முடியாது. இந்திய அரசு இந்த சட்டத்திற்காக நிதி அளிப்பது சட்டத்தின் பிரிவு 22(1)ன்படி அவசியமாகும்.
2.இருப்பினும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்திலிருந்து வரும் நிதி வரத்தானது ஒதுக்கீடு அடிப்படையில், சட்டத்தில் கூறப்படாத பல்வேறு வரம்புகளுக்கும் நியதிகளுக்குட்பட்டே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் மாநிலத்தின் தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே அனுமதி அளித்து விடுகிறது.இருப்பினும் அந்த ஆண்டில் அளிக்கப்பட்ட நிதி, அமைச்சகம் அனுமதித்த பட்ஜெட் அளவை விட குறைவாக உள்ளது.
3.இந்திய அரசு இத்தகைய சிறந்த சட்டத்தின் அடிப்படைகளை மாற்றுவதற்கும், அந்த திட்டத்தை நாட்டின் தேர்வு செய்யப் பட்ட சில பகுதிகளுக்கு மட்டுமானதாக குறைப்பதற்கும் யோசித்து வருவதாக பல முனைகளிலிருந்து செய்தி அறிந்தோம். கருவிகள் மற்றும் தொழிலாளர் விகிதத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஈடான நிதியை அதிகரிக்காமல் மேற்கொள்ளப்படுவதால் இது கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை மோசமாக பாதிக்கும். இந்த நடவடிக்கைகள் கிராமப்புறங்களிலுள்ள ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குடும்பங்களை - குறிப்பாக தலித்துகள். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் குடும்பங்களை நிச்சயம் பாதிக்கும். இதனால் இந்த குடும்பங்களுக்கு சுரண்டலிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தினை தோல்வி அடையச் செய்யும்.
4.புதிய அரசு இங்கு கூறப்பட்ட சட்டத்தின் நோக்கத்தையும் பரப்பையும் மேலும் மேம்படுத்த வேண்டும்; இந்த திட்டத்தின் செயல்பாடுகளை - கூலி விகிதத்தை அதிகரிப்பது மற்றும் திட்டத்திற்காக தகுதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும்; அது கிராமப்புறங்களில் கட்டுமானத்தையும் உற்பத்தி மற்றும் நிலையான சொத்துகளை உருவாக்குவதை நோக்கி கவனம் செலுத்தும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மேம்படுத்த வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் வேறுமாதிரி இருப்பதை காட்டுகின்றன.
5.சமூகத்தின் இத்தகைய பெரும்பாலான நலிவடைந்த மக்கள் பிரிவின ரின் நலன்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் , அவர்கள் தங்களது வாழ்வதற்கான உரிமையை இழப்பதற்கு பதிலாக அவர்கள் பயன் பெறும்படி நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்றும் பலமான முறையில் தங்களை வற்புறுத்துகிறேன். - திரிபுராவுக்கு கடும் நிதி வெட்டு
6.மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் 2014-15 திரிபுராவிற்கான நிதி கிடைப்பதை கடுமையாக குறைத்துள்ளது முழுமையாக ஏமாற்றமடைய வைக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக திரிபுரா மாநிலம் தொடர்ந்து சிறப் பாக செயல்படும் மாநிலமாக இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை அமல்படுத்தியதில் ஒரு சிறந்த செயல்பாட்டாளராக இருக்கிறது. திரிபுராவின் ஏழை மக்கள், குறிப்பாக தலித்துகள் - பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக உத்தரவாதப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு பயனை பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்புகளை தருவதோடு ஏராளமான எண்ணிக்கையில் நிலைத்திருக்கக்கூடியதும் உற்பத்திக்கான சொத்துக்களையும் கிராமப்புறங்களில் உருவாக்கியுள்ளது; அவை திரிபுராவின் கிராமப்புற பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக பங்களித்து வருகின்றன; திரிபுராவின் கிராமப்புற பகுதிகளில் இந்த திட்டத்தின் தாக்கத்தை வெளியிலிருந்து வருபவர் ஒருவரினால் தெளிவாகப் பார்க்க முடியும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இந்த திட்டத்தின் அமலாக்கத்திற்காக பல்வேறு சமயங்களில் தேசிய அளவில் பரிசளிப்பது உள்ளிட்டு பல பாராட்டுக்களை திரிபுரா பெற்றுள்ளது.
7.இந்தப் பின்னணியிலும், நிதி ஒதுக்கீட்டை கடுமையாக குறைக்கும் முடிவு மாநில அரசிடம் எந்த வித ஆலோசனையும் நடத்தப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்குப் பாதி குறைப்பதா?
8.மத்திய ஊரக வளர்ச்சித் துறை திரிபுராவிற்காக 2014-15 காலத்திற்கான தொழிலாளர் பட்ஜெட்டாக ரூ.1406.96 கோடியை ஒதுக்கியது. நாங்கள் அதற்கேற்ப திட்டமிட்டோம். ஆனால் இதற்கு மாறாக ரூ.652.01 கோடிதான் திரிபுராவிற்கு தரப்படும் என்ற செய்தியை சமீபத்தில் கிடைக்கப்பெற்றோம். இது முன்னதாக திரிபுராவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மக்களின் 46 விழுக்காடு தேவையைத்தான் பூர்த்தி செய்யும். இது கடந்த 2013-14ல் ஒதுக்கப்பட்ட ரூ.943.66 கோடியை விட குறைவானதாகும்.
9.இக்கடுமையான நிதி வெட்டு என்பது, கிராம பஞ்சாயத்துகள், வட்டார பஞ்சாயத்துக்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துக் களினால் தயாரிக்கப்பட்டதும் இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டதுமான செயல் திட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்திய அரசு மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்ப்பதில் நேர்மையாக இல்லை என்ற சந்தேகங்களையும் மக்களின் மனதில் உருவாக்கிடும்.
10.மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் திட்டத்தின்படி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது இரண்டு தவணைகளில் அளிக்கப்படுகிறது. ஆனால் திரிபுராவிற்கு இந்நாள் வரை ரூ.373 கோடிதான் 3 தவணைகளில் அளிக்கப்பட்டுள்ளது. திரிபுராவிற்குமத்திய அரசு ஒதுக்கும் நிதியான 652.01 கோடி ரூபாய்க்கு ஏற்றவாறு அனைத்து தேவைகளையும் திரிபுரா அரசு பூர்த்தி செய்துவிட்டது. கிராமப்புற பகுதிகளில் குறைந்த நிதி அளிப்பு மேலும் பாதிப்பை உருவாக்கும். வரும் மாதங்களில் விவசாயப் பருவத்தில் பாதிப்பு தீவிரமடையும். இத்திட்டத்தின் மூலம் கூலி வேலை வாய்ப்புக்களுக்கான தேவை வரும் மாதங்களில் அதிகரிக்கும்.
சிறப்பாகச் செயல்பட்டால் ஒதுக்கீட்டை குறைப்பீர்களா?
11.மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் பட்ஜெட்டில் திரிபுராவிற்கான ஒதுக்கீடு 2013-14ல் ஒதுக்கப்பட்டதை போன்றே 2014-15க்கும் குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான்,மேற்கு வங்கம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய சில மாநிலங்களுக்கு ஓதுக்கீடு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் சிறப்பாக செயல்படுகின்ற மற்றும் தேவையுள்ள திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
12.இந்த சூழ்நிலைமைகளில் திரிபுரா அரசின் பிரச்சனைகளை கனிவுடன் பார்க்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் அங்கீகரிக்கப் பட்ட பணத்தை உடனடியாக அளித்திடுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் நான் தங்களை வேண்டிக் கொள்கிறேன்.

No comments: