Saturday 8 November 2014

‘சபாஷ்! அப்படியே எனக்கு ஒரு அக்கவுண்ட்!’E.M.ஜோசப்...

கருப்புப் பணம் என்றவுடன், அது குறித்து ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய கதை ஒன்று சிலருக்கு நினைவிற்கு வரக் கூடும். ஜெஃப்ரி ஆர்ச்சர் பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அரசியல்வாதியாக இருந்து முழு நேர எழுத்தாளராக, நாவல் ஆசிரியராக, சிறு கதை எழுத்தாளராக மாறிய வர். அவர் எழுதிய சிறு கதைகளில் ஒன்று தான்க்ளீன் ஸ்வீப் இக்னேஷியஸ்”. அதன் கதைச் சுருக்கம் இது தான்: நைஜீரியா நாட்டில் கருப்புப் பணம் பெருமளவில் புழங்குகிறது. அதற்கெதிராக, மிகப்பெரும் நேர்மையாளர் என்று பெயர்பெற்ற அந்நாட்டின் நிதி அமைச்சர் இக்னேஷி யஸ் அகர்பி உள்நாட்டில் நிழல் பொருளா தாரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக் கைகளில் ஈடுபடுகிறார்.அதன் காரணமாகக்ளீன் ஸ்வீப் இக்னேஷியஸ்’ (‘அதிரடி இக்னேஷியஸ்என்று இப்போதைக்கு இதை சற்று தாராளமாக மொழி பெயர்த்துக் கொள்வோம்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அந்த நிலையில், தனது நாட்டினர் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தினையும் கைப்பற்றுவதற்காக அந்நாட்டின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் இக்னேஷியசை சுவிட்சர்லாந்திற்கு அனுப்புகிறார். ஸ்விஸ் வங்கிக்குச் செல்லும் அவர் அதன் மேலாளரைச் சந்தித்து தனது நாட்டு கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்ப் பட்டியல் வேண்டும் எனக் கேட்கிறார். வங்கி மேலாளர் பட்டியலைத் தர முடியாது என மறுக்கிறார்.கோபமடைந்த அமைச்சர் தனது பாக்கெட்டில் இருக்கும் ரிவால்வரை எடுத்து மேலாளரின் நெற்றியில் அழுத்திக் கொண்டு, பட்டியலைத் தராவிட்டால் கொன்று விடுவ தாக மிரட்டுகிறார். “செத்தாலும் சாவேன். ஆனால் பெயர்களைச் சொல்ல மாட்டேன்.” என்கிறார் வங்கி மேலாளர். இங்கு தான் கதையில் திருப்பம். நெற்றியிலிருந்த ரிவால்வரை எடுத்து விட்ட அமைச்சர் மேலாளரை முதுகில் தட்டிக் கொடுக்கிறார்.“ சபாஷ்! வங்கி அதிகாரி என்றால் இப்படித்தான் விசுவாசமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்என்று கூறிய நிதி அமைச்சர் இக்னேஷியஸ்அப்படியே எனக்கு ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணுஎன்று சொல்லி, பெட்டியில் கொண்டு வந்திருக்கும் 5 மில்லியன் டாலர் பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கிறார். கதை இத்துடன் முடிகிறது. ஆனால், பல நாடுகளின் கதை இங்கு தான், இப்படித் தான் தொடங்குகிறது. சரி இப்போது நமது நாட்டுக் கதைக்கு வருவோம்.
குடும்பத்திற்கு ரூ.15 லட்சமாம்!
கருப்புப் பணம், இந்தியப் பொருளா தாரத்தில் நீண்ட காலத் தொடர் கதை. ஜவகர் லால் நேரு ஆட்சிக் காலத்தில் பிரபல புள்ளிஇயல் அறிஞர் பி.சி. மஹலநோபிஸ் தொடங்கி, இந்தியக் கருப்புப் பணத்தின் அளவு குறித்து பலர் அவ்வப்போது பல மதிப்பீடுகளைச் செய்துள்ளனர். எனினும், அதை வெளிக் கொணர மத்தியில் ஆண்ட காங்கிரசோ, பி.ஜே.பியோஇதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக வெளி நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி நம் நாட்டிற்குக் கொண்டு வந்து விடுவதாகக் கூறிய மோடி, அத்துடன் நிற்கவில்லை.இந்தியக் குடும்பம் ஒவ் வொன்றிற்கும் இதன் பயனாக ரூ.15 லட்சம் கிடைப்பதற்கும் வகை செய்ய முடியும் எனக் கூறி வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தினார். மக்களுக்கு இப்படி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, நடவடிக்கை என்று வரும் போது குட்டிக்கரணம் அடித்தது. வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத் திருக்கும் 627 நபர்கள் குறித்து ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடு களிலிருந்து கிடைத்திருக்கும் பட்டியலை வெளியிடுமாறு கோரிக்கை வந்த போது, பல நாடுகளுடன் செய்து கொண்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் படி, பெயர்களை வெளியிடுவது சாத்தியமல்ல என்று மோடி அரசு, உச்சநீதி மன்றத்தில் கூறியது.2011ம் ஆண்டு முதல்மத்திய அரசின் கைவசமிருக்கும் இப்பட்டி யலை வெளியிட மறுத்த .மு.கூ அரசு கூறியஅதே சொத்தை வாதம் தான் இது. இரட்டை வரி ஒப்பந்தம் குறித்து மோடி ஒன்றும் அறியாதவரல்ல. ஆனாலும், இந்திய செல்வந்தர் கள், ஊழல் அரசியல்வாதிகள் வெளி நாட்டில் தேக்கி வைத்திருக்கும் சட்ட விரோதச்சொத்துக்கள் குறித்து மக்கள் மனதில்இருந்த வெறுப்பினையும், அதனை வெளிக் கொணர்வது குறித்த ஆர்வத்தினையும் வாக்குகளாக மாற்றிக் கொள்வதற்கு, மோடியின் அதிரடி வாக்குறுதிகள் அன்று அவருக்கு உதவின. ஆனால், இன்று எதார்த்தத்தின் நிர்ப்பந்தத்தில் மோடி அரசின் உண்மை முகம் அம்பலப்பட்டு விட்டது.
அளவுதான் என்ன?
அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில், வெளி நாடுகளில் இருக்கும் இந்தியக் கருப்புச் சொத்துக்களின் அளவு குறித்து பலகணக்குகள், மதிப்பீடுகள் உள்ளன. 1948 முதல் 2008 வரை இந்தியாவிலிருந்து வெளி யேறிய பணம் வட்டியும் முதலுமாக 462 பில்லியன் டாலர் ( சுமார் ரு. 27 லட்சத்து 72 ஆயிரம் கோடி) வரை இருக்கலாம் என குளோ பல் பைனான்ஷியல் இண்டக்ரிட்டி என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நமது மத்திய புலனாய்வு நிறுவனத்தின் (சி.பி.) 2010ம் ஆண்டு மதிப்பீட்டின் படி, அது ரூ. 30 லட்சம் கோடி.ஹவாலா, சர்வதேசக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் நிதி, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக நாடுகளுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லுதல் என்று கணக்கினை நீட்டித்தால் 1948 முதல் 2012 வரை, அது ரூ.60 லட்சம் கோடிவரை இருக்கலாம் என்று, இதுகுறித்து ஆய்வு செய்திருக் கும் டில்லி ஜவகர்லால் பல் கலைக் கழகப் பேராசிரியர் அருண்குமார் மதிப்பீடு செய் திருக்கிறார். இந்தப் பணத்தை எல்லாம் பத்திரமாக பதுக்கி வைத்துக் கொள்ளும் வகையில் சுமார் எண்பது நாடுகளின் வங்கிகள் உதவி வருகின்றன. சுவிட்சர்லாந்து வங்கிகள் தான் இதைத் தொடங்கி வைத்தவை என்ற காரணத்தால் வெளிநாட்டுக் கருப்புப் பணம் அனைத்துமேஸ்விஸ் பணம்என ஒரு பொதுப் பெய ரால் அழைக்கப்படுகிறது.
சுழல் பயணப் பணம்!
பேராசிரியர் அருண் குமார் மதிப்பீட் டின் படி, இந்தியாவின் கருப்புப் பணத் தில், 10 சதவீதம் வரை மட்டுமே வெளிநாட் டில் உற்பத்தியாகிறது; 90 சதவீதம் உள் நாட்டிற்குள்ளேயே உருவாகிறது. உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 50 சதவீதம், அதாவது இன்றைய மதிப்பில் ரூ.65 லட்சம் கோடி கருப்புப் பணமாக மாறி விடுகிறது. அதில் ஒரு பகுதி செலவழிக்கப்படுகிறது. மீதிப் பணம் சேமிக்கப் படுகிறது. தங்கம், ரியல்எஸ்டேட் என்று உள் நாட்டிலேயே பல வகைகளில் சேமிக்கப் படுகிறது. மற்றொரு பகுதி ஹவாலா பரிவர்த்தனைகள், ஏற்று மதி இறக்குமதி விலைகளில் செய்யும் தில்லுமுல்லுகள், சட்ட விரோத நடவடிக்கை கள் என பல வடிவங்களில் வெளி நாட் டில் கருப்புப் பணமாக மாறுகிறது. எனவே, கருப்புப்பணத்தின் பெரும் பகுதி நம் நாட்டிற்குள் ளேயே இருக்கிறது என அவர் கூறுகிறார்.இந்தியர்கள் வெளிநாட்டில் உருவாக்கி யிருக்கும் கருப்புப் பணம், பங்கேற்புப் பத் திரங்கள் (பார்ட்டிசிப்பேட்டரி நோட்ஸ்) என்றமாயாவி ஆவணங்கள் மூலம் நம் நாட்டிற் குள் மீண்டும் வருகிறது. பலருடைய பணத்தை நம் நாட்டு பங்குச் சந்தையில் முதலீடுசெய்யும் நிதி முதலீட்டாளர்கள், அவை யாருடைய பணம் என்று சொல்ல மறுக்கின்ற னர். பங்கேற்புப் பத்திரங்களின் உடைமை யாளர்களின் பெயர்களை வெளியிடுமாறு கடந்த காலங்களில் இந்தியா வலியுறுத்திய போது, மூலதனத்தை வெளியே எடுத்துச் சென்று விடுவோம் என அந்நிய நிதி முதலீட் டாளர்கள் இந்திய அரசை மிரட்டியது எல்லாம் நமக்கு நினைவில் உள்ள விஷயங்களே. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடு களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பான ..சி.டி, வரிஏய்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், வங்கிக்கணக்கு ரகசியம் குறித்த விதிகளைத் தளர்த்த வேண்டும் என சுவிட்சர் லாந்தை நிர்ப்பந்தித்திருக்கிறது.இந்தப் பின்னணியில், ஸ்விஸ் வங்கிகளும் விதிகளைத் தளர்த்துவது போன்றதொரு தோற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தவங்கிகள் துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தங்களது கிளைகளைத் தொடங்கி உள்ளன. அதேபோன்று வரி ஏய்ப்புச் சொர்க்கபுரி நாடு களில் பன்னாட்டு வங்கிகள் பல தங்களது கிளைகளைத் திறந்துள்ளன. இவற்றின் மூலம் கருப்புப் பணத்தின் சுழல் பயணம் உலகெங்கிலும் தொடர்கிறது.
அமெரிக்க நீதிமன்றத்தில்....
கருப்புப் பணம் குறித்த விஷயத்தில் அமெரிக்க நீதிமன்ற அனுபவம் குறிப்பிடத் தக்கது. கருப்புப் பணக் குவிப்பில் உதவி செய்த சுவிட்சர்லாந்து நாட்டின் யூ.பி.எஸ் வங்கிக்கு எதிராக, ஊழல் எதிர்ப்புப் போராளி பிராட்லி பெர்க்கென்ஸ்டீன் தொடுத்த வழக் கில் அவ்வங்கி ஒத்துழைக்க மறுத்தது. ஆனால்,ரகசியக் காப்பு விதிகள் எதனையும் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள் ளாத நிலையில், அவ்வங்கி குற்றத்தை ஒப்புக்கொண்டது. வங்கிக்கு 780 மில்லியன் டாலர்அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துகருப்புப் பணம் வைத்திருந்த 4,500 அமெரிக்கர்களின் பெயர்களும் வெளிக் கொணரப்பட்டன. அதே போன்று அண்மை யில், கிரடிட் ஸ்விஸ் வங்கியும் 2.5 பில்லி யன் டாலர் அபராதத்திற்கு ஆளானது. அமெரிக் காவிற்குப் பொருந்தாத கருப்புப் பண ரகசிய விதிகள், இந்தியாவிற்கு மட்டுமே பொருந்தும் என மோடி வாதிடப் போகிறாரா எனத் தெரிய வில்லை.
மற்றுமொரு மோடி வித்தை!
இன்றைய நிலையில் இரண்டு நாடு கள் அளித்த பட்டியலில் இருப்பவர் எண் ணிக்கை மொத்தம் 653. ஆனால், வரி ஏய்ப் பவர்கள், ஊழலில் ஈடுபடுபவர்கள் என பல லட்சம் இந்தியர்கள் பல நாடுகளில் அதைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள். உள்நாட்டிலும் வைத்திருக்கிறார்கள். பல பன்னாட்டு வங்கிகள், இந்தியத் தனியார் வங்கிகள் அவர்களுக்கு பல வழிகளிலும் உதவிவருகின்றன. ஹவாலா, கடத்தல் என கருப்புப் பணம் செழித்து வளர்ந்து வரு கிறது. இவற்றிற்கெதிராக உருப்படியான நட வடிக்கைகள் எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசுகள், தங்கள் நாட்டு முதலாளிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் சட்டப் பூர்வமாகவே பெருமளவில் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர்.அவை போதா தென்று, மறுபுறத்தில் அவர்களின் சட்ட விரோதமான வருமானத்திற்கு வழி செய்யும் வகையிலும் சில துணைக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. அமெரிக்காவின் பிராட்லி பெர்க்கென்ஸ் டீன் போன்ற ஊழல் எதிர்ப்பாளர்கள், நீதிமன் றங்கள் போன்றவற்றின் நிர்ப்பந்தங்களால் அவ்வப்போது சில நடவடிக்கைகள் வரு கின்றன. அவ்வளவே! இங்கேயும் உச்சநீதி மன்றம் தீவிரமாகத் தலையிடாமல் இருந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் கூட எந்த அளவிற்கு திறமையாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், கருப்புப் பணத்தின் ஊற்றுக் கண்களை அடைக்காமல், அதை ஒழிப்பதாக வீர வசனம் பேசுவது மற்றுமொரு மோடி வித்தை என்பதைத் தவிர வேறென்ன?

No comments: