Tuesday, 4 November 2014

DYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்த இளைஞர்களின் ஒப்பற்ற நாயகனான மாவீரன் பகத்சிங்கின் லட்சியங்களான பாலுக்கு அழாத குழந்தைகளும், கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலையில்லா இளைஞர்களும் இல்லாத ஒரு புதிய தேசத்தை உருவாக்குவோம் என்ற முழக்கங்களை கொள்கைகளாக நெஞ்சில் ஏந்தி சுமார் 5 கோடி இந்திய இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு மாபெரும் விருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 1970களில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் கடுமையாக அடக்குமுறைகள், வேலையில்லா திண்டாட்டம், வறுமை உள்ளிட்டவற்றை எதிர்த்து போரிட ஒரு தீரம்மிக்க இளைஞர் அமைப்பு காலத்தின் அவசியம் என்ற சூழலில் தமிழகத்தில் ஒரு புதிய விடிவெள்ளியாய் உருவானது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி.இதன் முதல் துவக்கமாக 1972ம் ஆண்டு டிசம்பர் 16,17 தேதிகளில் அன்றைய ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருப்பூரில் மாநாடாக கூட்டப்பட்டது. இதில் வாலிபர் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது தான் இவ்வமைப்பிற்கு கோவை, நீலகிரி மாவட்ட சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியாக பரிணாமித்தது. இதன் முதல் தலைவராக ஜி.காளியப்பனும், செயலாளராக கே.சி.கருணாகரனும், பொருளாளராக ஆர்.பாலகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி உருவாகி மக்களின் பிரச்சனைகளுக்காக தெருவில் இறங்கி போராடியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தனித்தனியாக இயங்கி வந்த சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியை ஒருங்கிணைக்கும் பொருட்டு 1977ம் ஆண்டு கோவை விளாங்குறிச்சியில் மாநில ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்களாக என்.நன்மாறனும், கே.சி.கருணாகரனும், ஆர்.கிருஷ்ணன், பாலதண்டாயுதபாணி, பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின் 1978ம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் முதல் மாநாடு திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலத்தலைவராக கே.சி.கருணாகரனும், பொதுச்செயலாளராக என்.நன்மாறனும் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டின் அறைகூவலாக அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து மாநிலம் தழுவிய மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தியது. மேலும், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, கன்னியாகுமரி ஆகிய இரு முனைகளிலிருந்து சைக்கிள் பிரச்சாரம் துவங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டது. இப்பிரச்சாரத்தின் விளைவாக அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேலையில்லா கால நிவாரண நிதி என்ற வாக்குறுதியை வழங்கி நடை முறைக்கும் கொண்டு வந்தனர். அதோடுமட்டும் இல்லாமல் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான கட்டாயத்தை உருவாக்கினர்.இதேபோல், இவ்வமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வந்தபோதும்,ஆளும் அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் தீரமுடன் போரிட்டது. இதைத்தொடர்ந்து இவ்வமைப்புகளை அகில இந்திய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 1979-80களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த
அமித் வாப் பாசு அகில இந்திய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். 1980 நவம்பர் 1,2 மற்றும் 3ம் தேதிகளில் பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இதன் முதல்மாநாடு நடைபெற்றது. அதில் அகில இந்திய அளவில் இந்திய இளைஞர்களின் லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வமைப்பு ஆளும் அரசுகளின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து இன்று வரை தீவிரமுடன் போரிட்டு வருகிறது. இக்கொள்கைகளுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் சிறைகொட்டடிகளுக்குள் அடைபட்டும், கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டும் ஆளும் அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேநேரம், ஆளும் அரசுகள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்னும் வகையில் அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.குறிப்பாக, பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்ற நிலையில் தற்போது அமெரிக்கா ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ நாடுகளிடம் இந்திய தேசத்தை அடகு வைக்கும் பணிகளை ஆளும் அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் மத துவேஷங்களை மக்கள் மனங்களில் புகுத்தும் வேலையையும் மிகத்துரிதமாக ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. இத்தகைய அபாயங்களிலிருந்து மக்களையும், தேசத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமையும், பகத்சிங்கின் லட்சியத்திற்காக தங்களுடைய இன்னுயிரை இழந்த தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுக்க வேண்டிய அவசர, அவசியமும் இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. - .ஜீவானந்தம்

No comments: