1956ம் ஆண்டு மத்திய அரசின் தொழிற்கொள்கை தீர்மானமும், அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் உந்துசக்தியாகவும் செயல்பட்டன. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது சற்று தேக்கமடைந்தாலும் பின் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி காலத்தில்(1984-89) துவக்கப்பட்ட தாராளமயம் 1991ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை என்ற வடிவில் பொதுத்துறைகளை பின்னோக்கித் தள்ளியது. பொதுத்துறைகளை தனியார் மயப்படுத்துவது என்பது சிறிய அளவிலான பங்கு விற்பனையில் துவங்கியது. பின்னர் படிப்படியாக ஒட்டுமொத்த தனியார் மயத்திற்கு நவீன தாராளமய கொள்கைகளின் மூலம் பொதுத்துறைகள் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
UPA அரசு-1 இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு இருந்த காலத்திற்கு பிறகு UPA-2 அரசும், என்டிஏ அரசும் பொதுத்துறைகளை எவ்வாறு சீரழித்து வந்தன என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அதிக பெரும்பான்மையோடு ஆட்சியில் இருக்கும் என்டிஏ அரசாங்கம் சென்றமுறை இருந்ததைவிட அதிதீவிரமாக செயல்படும். மோடி அரசு பதவியேற்றவுடனேயே பங்கு விற்பனையை துவக்கியுள்ளது. நிதி அமைச்சகம் 12 பொதுத்துறைகளிலும், ஏற்கெனவே பங்கு விற்பனை நடந்த பொதுத்துறைகளிலும் அடுத்த 8 மாதங்களில் ரூ.58,425 கோடி அளவிற்கு பங்கு விற்பனை செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி எங்களுடைய பங்கு விற்பனை, திட்டமிட்டப்படி தொடரும் என்று அறிவித்துள்ளார். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக அரசு நிர்ணயித்துள்ள தொகையை அடைய முடியாது என்ற நிலை இருந்தாலும், பொதுத்துறை நிர்வாகங்கள் மிக குறைந்த விலைக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்ததாலும், அரசின் பிடிவாதப் போக்கின் காரணமாகவும், மிரட்டல் காரணமாகவும் பொதுத்துறைகளின் பங்குகள் சூறையாடப்படும்.
எல்லா பொதுத்துறைகளிலும் குறைந்தபட்சம் 25 சதவீதப் பங்குகளை விற்க வேண்டும் என்ற செபி(SEBI) வழிகாட்டுதலை பின்பற்றவும் அரசு முடிவெடுத்துள்ளது ஒரு பொதுத்துறையின் பங்குளை இன்னொரு பொதுத்துறையை வாங்க வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உட்பட லாபத்தை கோடிக்கணக்கில் சம்பாதிக்கும், நல்ல முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களையும் மற்றும் ரயில்வேயின் துணை நிறுவனங்களையும் விற்பதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
ஏற்கெனவே இன்சூரன்ஸ், ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் அல்லது உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. இது பன்னாட்டு நிதி மூலதனம் மேலும் நம்முடைய பொருளாதாரத்தில் கூடுதலாகப் பிடியை அதிகரிக்கவும், நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கவும் மோடி அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் பங்கு விற்பனை விஷயத்தில் அரசை எச்சரிக்கை செய்துள்ளது. பங்கு விற்பனை சம்பந்தமாக ஐந்து விஷயங்களை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அரசின் தன்னிச்சையான முடிவிற்கு முன்னால் நிறுவனங்களின் எதிர்ப்புக்கு வரையறை உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நிர்வாகத்தின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பங்கு விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள தொழிற்சங்கங்கள் பங்கு விற்பனைக்கு எதிராக நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, அனைத்து சங்க போராட்டமாக மாற்றுவதற்கு உடனடி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.-
அகில இந்திய பொதுத்துறை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்ட தீர்மானத்திலிருந்து..
No comments:
Post a Comment