Thursday, 13 November 2014

தகர்க்கப்படும் நாட்டின் கதவுகள் . . .

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களை விற்பது தொடர்பாக அரசு திறந்த மனத்துடன் இருக்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதும் அதற்காக இலக்கு நிர்ணயிப்பதும் கடந்த 10 ஆண்டுகளாகச் சடங்காகிவிட்டது. அரசு நிர்ணயிக்கும் இலக்கை எட்ட முடியாமல், ஆண்டுதோறும் தோல்வியே ஏற்படுகிறது. அப்படியும் மனம் தளராத விக்கிரமாதித்யர்களாக அதே முயற்சியில் அரசுகள் ஈடுபடுகின்றன. நஷ்டம் அடையும் நிறுவனங்களை விற்பதையாவது புரிந்துகொள்ள முடிகிறது, லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளையும் விற்கத் துடிப்பது ஏன்நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, மின் உற்பத்தி, ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், ராணுவத் துக்கான தேவைகள், சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாய ஆராய்ச்சி, மருந்து மாத்திரை தயாரிப்பு போன்ற துறைகளில் தனியாரின் பங்களிப்பு பெருமளவுக்கு இருக்க முடியாது என்பதாலும், நாட்டை வளப்படுத்த இவை அவசியம் என்பதாலும்தான் இந்தத் துறைகளில் அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இவற்றை இனி தொடர வேண்டிய அவசியமில்லை என்ற அளவுக்கு நிலைமை மாறி விடவில்லை. சொல்லப்போனால், தனியார் துறையும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை.
இந்தியத் தனியார் துறையால் அதிக முதலீட்டைத் திரட்ட முடியவில்லை, நவீனத் தொழில்நுட்பத்தைப் பெற முடியவில்லை என்பதால்தான் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம். கார், ஸ்கூட்டர் முதலிய வாகனங்களின் தயாரிப்பில்கூட அந்நிய நிறுவனங்கள்தான் கொடிகட்டிப் பறக்கின்றன.
அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதிலும் தில்லு முல்லுகள் நடந்திருப்பதைத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து, அடிமாட்டு விலைக்கு விற்றதெல்லாம் அம்பலமாகியிருக்கிறது. தனியார் சிலர் சிண்டிகேட்டாகக் கூட்டு சேர்ந்து, மிகக் குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய வரலாறும் நமக்கிருக்கிறது.அரசுத் துறை நிறுவனங்கள் என்பவை வெறும் இயந்திரங்கள், கட்டிடங்கள், மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு மட்டுமல்ல. உயிருள்ள உற்பத்திக் காரணிகளான தொழிலாளர்களையும் கொண்டவை. அரசு நிறுவனங்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள் கட்டிடம், இயந்திரம் என்று எல்லாவற்றையும் பிரித்து விற்றுவிட்டு, நிலத்தை கோடிக் கணக்கான ரூபாய் லாபத்துக்கு ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் விற்பதில்தான் போய் முடியும்.தொழில்துறையில் அரசுக்கு வேலையில்லை என்று பிரதமர் மோடி கருதுவது ஒருசில துறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்குப் பொருந்தவே பொருந்தாது. அரசுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் நடைபெறக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதில் அக்கறை செலுத்த வேண்டும்.விற்பனை ஒரு தீர்வாகாது. தனியார் துறையிலும் நிறுவனங்கள் நஷ்டம் அடையாமல் இல்லை. வங்கிகளுக்கு 500 தனியார் நிறு வனங்கள் செலுத்த வேண்டிய வாராக்கடன் அளவு மட்டுமே 2014 மார்ச் மாதக் கணக்குப்படி 28 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பதிலிருந்து இதை உணரலாம்.
காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தனியார்மயத்துக்காகக் கதவுகளைத் திறந்துவிட்டன என்றால், பாஜக அரசு கதவுகளைத் தகர்த்துக்கொண்டிருக்கிறது. கதவுகளைத் தகர்ப்பதென்பது இறுதியில் வீட்டைத் தகர்ப்பதில்தானே போய் முடியும்!

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இப்பாதையின் பயணம் எதில் போய் முடியுமோ?