ஐந்து மாதங்களுக்கு முன் நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது, “சிறிய அமைச் சரவை, சிறப்பான நிர்வாகம்” என்பதாகப் பெருமையடித்துக்கொண்டார்கள். முந்தைய மன்மோகன்சிங் அரசில் நிறைய அமைச்சர்கள் இருந்ததால் பணிகள் பெருமளவுக்கு நடைபெறவில்லை என்று பாஜக தலைவர்கள் கூறினார்கள். தங்களுடைய அரசு அதற்கு மாறுபட்டதாக குறைவான அமைச்சர்களைக் கொண்டதாக, ஆனால் சிறப்பாக செயல்படக்கூடியதாக இருக்கும் என்றார்கள். ஆனால், சிறிய அமைச்சரவையால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லையோ, அல்லது கட்சிக்குள் நெருக்கடி கொடுத்தார்களோ அதற்குள்ளாக அந்த “சிறிய” அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுவிட்டது.
தற்போது கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்பு இணையமைச்சர்களும், இணையமைச்சர்களுமாக 66 பேர் இருக்கிறார்கள். முந்தைய அரசின் அமைச்சர்கள் எண்ணிக் கையைவிட பெரிதாக ஒன்றும் குறைந்து விடவில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் விரிவுபடுத்தப்பட மாட்டாது என்பதற்கும் உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால் மூன்றாவது சுற்று அமைச்சரவை மாற்றம் விரைவில் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் பாதுகாப்புதுறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதுவரை அதையும் கவனித்துவந்த நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடமிருந்து அந்தப் பொறுப்பு மாற்றப்பட்டிருக்கிறது.ஆனால் அவருக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை கூடுதலாகத் தரப்பட்டிருக்கிறது. ஆக, அவரது உடல்நலம் கருதியும், நிதித்துறையை முழு கவனத்துடன் கையாள்வதற்காகவும்தான் கூடுதல் பொறுப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதென சொல்வதற்கில்லை. சிவசேனா கட்சியிலிருந்து ஞாயிற்றுகிழமையன்றுதான் (நவ.9) பாஜகவுக்குத் தாவினார் சுரேஷ் பிரபு. அவர் உடனடியாக ரயில்வே அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்! மேலும் பல கட்சித் தாவல்களை ஊக்குவிப்பதற்கான முகாந்திரமே இது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதைத் தள்ளுபடி செய்துவிட முடியாது.தனது நிர்வாகத்திற்குத் தோதானவர்களை அமைச்சர்களாக நியமிப்பது பிரதமருக்கு உள்ள சொந்த அதிகாரம்தான் என்றாலும், சிறியஅமைச்சரவையை இப்போது ஏன் விரிவுபடுத் தினார் என்பதை மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
ஆனால் நுட்பமாக கவனிக்கிறவர்களுக்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இந்த ஒரே நடவடிக்கையால் இரண்டு நோக்கங்களை மோடி அரசு நிறைவேற்ற முயன்றிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒன்று, உள்நாட்டு - பன் னாட்டு சந்தை ஆதிக்க சக்திகளுக்கு பல மடங்கு உவப்பான முறையில் தொண்டாற்றக் கூடியவர்கள் அதற்கேற்ற பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இன்னொன்று, அரசு எந்திரத்திற்குள் ஒற்றை மத ஆதிக்கவாதிகளைப் புகுத்துகிற RSS திட்டப்படி அதன் தீவிர உறுப்பினர்கள் அதிகார பீடத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதையொட்டித்தான் சாதி அடிப்படையிலும் பதவிகள் தரப்பட்டிருக்கின்றன. சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வர இருப்பதையும், குறிப்பாக உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை சாதிய அடிப்படையில் வளர்ப்பதையும் கருத்தில் கொண்டே இந்தமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதச்சார்பின்மைக்காக நிற்போர் கவலை தெரிவித்துள்ளனர்.அரசு நிர்வாகம் இப்படி கார்ப்பரேட் பிடியிலும் காவி அரசியல் பிடியிலும் சிக்குவது ஜனநாயகத்துக்குப் பெருங்கேடு. மக்களும் மக்கள் இயக்கங்களும் விழிப்போடிருந்து அந்தப் பெருங்கேட்டை எதிர் கொண்டாக வேண்டும்.---- தீக்கதிர்
No comments:
Post a Comment