ஆப்ரஹாம் லிங்கனின் முயற்சியால், அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டாலும், ஆப்ரிக்கர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் மீதான அடக்கு முறை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்த இனவெறியை எதிர்த்து அறவழியில் போராடி அதில் வெற்றியும் கண்டவர் மார்ட்டின் லூதர் கிங். அமெரிக்காவின் அட்லாண்டாவில் பிறந்த மார்ட்டின், கிறித்துவ போதகராகி இறைப்பணியைச் செய்து வந்தார். 1955-ம் ஆண்டு, டிசம்பர் 1-ம் தேதி, ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பின பெண்மணி, வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்ததற்காக பேருந்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். இதுவே, இனவெறிக்கு எதிராக ஆப்ரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட வைக்க முக்கிய காரணமாயிற்று. இதனையடுத்து, மார்ட்டின் லூதர் கிங்கும் கறுப்பின அடக்குமுறையை எதிர்த்து அறவழியில் போரிட்டார். 1963-ம் ஆண்டு வாஷிங்டனில் மிகப்பெரிய அமைதிப்பேரணி நடத்திய மார்ட்டின், தனது, பிரபலமான "I have a Dream" என்ற பேச்சைத் தொடங்கினார். இதற்கு அடுத்த ஆண்டே, மார்ட்டினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆப்ரிக்கர்களின் தொடர் போராட்டம் காரணமாக, 1965-ம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கருப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடனப்படுத்தும் மனித உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. கருப்பர்களின் உரிமைகளுக்காக போராடி அதில் வெற்றியும் கண்ட மார்ட்டின் லூதர் கிங், தனது 39-வது வயதில் சுட்டுக்கொல்ப்பட்டார். அவர் இறந்த 9 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க குடியரசுத் தலைவரால் வழங்கப்படும், சுதந்திரத்திற்கான விருது 1977-ம் ஆண்டு இதே நாளில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment