Sunday 13 July 2014

ஏழைகளுக்கு ஒரு நீதி ! , கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதி !. . .

படத்தில் உள்ளது பாரத ஸ்டேட் வங்கியின் மன்னார்குடி கிளை. அம்புக்குறி காட்டப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனரில் இருப்பது கடன் வாங்கி கட்டமுடியாத விவசாயியின் படம் ( மறைக்கப்பட்டுள்ளது) விவசாயியின் பெயர் முகவரி, கடன் எண் விபரங்கள். அதாவது கடன் வாங்கி கட்டாத விவசாயியின் படத்தை மக்கள் மத்தியில் போட்டு அவர் மானத்தை வாங்குவதன் மூலம் கடன் தொகை வசூலிக்க வங்கி பயன்படுத்தும் உத்தியாம். மன்னை நகர மக்களை அவமானத்திலும்; அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இந்த விளம்பரம். எங்கே போய் நிற்கிறது இந்திய வங்கித்துறை.
1955 ஆம் ஆண்டு இந்திய வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டபோது அப்போதிருந்து தி இம்பீரியல் வங்கி பாரத ஸ்டேட் வங்கியானது. நாடு முழுவதிலும் நடுத்தர நகரங்களில் உடனே 400 கிளைகள் துவக்கப்பட்டது. நட்டம் வந்தாலும் சரி வேளாண் கடன்கள் தாராளமாக அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. வேளாண் உற்பத்தி மற்றும் சேவை என்பதை மையமாக வைத்துதான் வங்கிகளின் பணி இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்தான் நாட்டுடமையாக்கப்பட்டு வங்கிகள் செயல்படத்துவங்கின. அமெரிக்க சார்பு சந்தை பொருளாதாரத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வங்கித்துறையை வளைக்கத் தொடங்கியபின் வட்டியும் லாபமும் முதலீடுகளை திரட்டி பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது மட்டும் தான் சேவை என்ற நோக்கில் தறிகெட்டு சென்று கொண்டிருக்கிறது இந்திய வங்கித்துறை. இதன் அருவருப்பான வெளிப்பாடுதான் மேற்படி வங்கி விளம்பரம்.
2007லிருந்து 2013 வரை தேங்கி நின்ற வங்கிக்கடன் 4 கோடியே 94 லட்சத்து 836 கோடி ரூபாய்கள். இதில் சரிபாதி முதலாளிகள் பாக்கியாம். 1 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதில் 95 சதம் முதலாளிகளின் கடன். நாம் எழுப்பும் கேள்வி இதுதான். பொது மக்கள் மத்தியில் விளம்பர கிட்டி போட்டு விவசாயிகளிடம் வசூலிக்கும் வங்கிகள் கடன் தொகையை கட்டாத முதலாளிகளின் படங்களை அந்தந்த வங்கிகளின் வாசலில் போட வேண்டியதுதானே? விளம்பரம் போட்டு கேவலம் செய்வது சம்பந்தப்பட்ட விவசாயியை அல்ல. நமது விவசாயத்தையும் நமது அரசியல் சாசனம் உறுதி செய்யும் கவுரவமான இந்திய வாழ்க்கையையும்தான். இந்த விளம்பரம் நாகரீகமற்றது. கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. குற்றமும் ஆகும்.

No comments: