தமிழக அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு போட்டுள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் கட்சி மக்களுக்காக தொடர்ந்து போராடும் என விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் நடைபெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பேசினார்.அவர் மேலும் பேசியதாவது:தமிழகத்தில் மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது என அறிக்கை விட்டதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளை மட்டுமல்ல, மரங்களும் வெட்டப்படுகின்றன. பலவிதமான அடக்குமுறைகளை சந்தித்த கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எங்களது தோழர்கள் ஆங்கிலேய ஆட்சியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி கட்சியை வளர்த்தனர். காங்கிரஸ் எல்லா மாநிலங்களில் ஆட்சியில் இருந்த போது, முதன்முதலில் கேரளாவில் ஆட்சியை பிடித்தது செங்கொடி இயக்கம். இன்றும் திரிபுராவில் 4 வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.திரிபுரா மாநில முதல்வர் வங்கிக் கணக்கில் வெறும் 3 லட்ச ரூபாய் மட்டுமே உள்ளது. அனைத்து பத்திரிகைகளும் ஏழ்மையான முதலமைச்சர் என வியந்து எழுதியுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் தொழில் பூங்கா, நெசவு பூங்கா, ஜவுளிப் பூங்கா என வெறும் அறிவிப்புகளாக வெளியிட்டனர். அதேபோல் தான் அதிமுகவும் சிறு குறு தொழில்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என கடன் தருகிறோம் என மட்டுமே அறிவிக்கின்றனர். அதிகாரிகள் இரு கட்சிகளுக்குமே எழுதி கொடுத்து வருவதை சட்டமன்றத்தில் அமைச்சர்கள் படிக்கின்றனர். தமிழகத்தில் புதிய தொழில் துவங்க எந்த அறிவிப்பும் இல்லை. தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் எவ்வித தொழில்களும் இல்லை. சோழவந்தான் பகுதிகளில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகமாக உள்ளது.எனவே, சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தொழில் துவங்க நிதி இல்லை. தனியார் தொழிற்சாலை துவங்க அரசு உதவி செய்யும் என பதில் கூறுகிறார். விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எழுதி கொடுத்துள்ளோம். ஆனால் அதை விவாதத்திற்கு எடுக்க மறுக்கின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது, தற்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காய்கறி மாலை அணிந்து சட்டசபைக்கு வந்தார். கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.இதையொட்டி அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆட்சிக்கு வந்ததும் பேச மறுக்கின்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், மக்கள் மன்றத்திலும் கொண்டு செல்லும். முதியோர் பென்சன் பலருக்கு 6 மாதமாக வழங்கப்படவில்லை. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. திண்டுக்கல்லில் ஒரு லாரி தண்ணீர் ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. தனியார் கம்பெனிகள் தண்ணீரை விற்கின்றனர். அவர்களுக்கு மட்டும் தண்ணீர் எப்படி கிடைக்கிறது. பிரதமராக நரேந்திரமோடி வந்தால், தமிழக மக்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்றனர்.ஆனால், அவர் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தான் 250 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 எந்திர படகுகளை இலங்கை ராணுவத்தினர் கொண்டு சென்று விட்டனர். மன்மோகன்சிங்கை விட அதிகமாக விலைவாசியை உயரச் செய்து, அவரை மோடி நல்லவராக்கி விட்டார். மோடி ஆட்சியில் 2 முறை டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு
பாலபாரதி பேசினார்.
No comments:
Post a Comment