Wednesday, 30 July 2014

ஆட்சி மாறியது... அவஸ்தை மாறவில்லை

கடந்த மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நிலையில், மே 31-ல் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அன்றிலிருந்து கடந்த 22-ம் தேதி வரை தமிழக மீனவர்கள் 258 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இப்போது இலங்கை சிறையில் இருக்கின்றனர். இந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் 57 விசைப் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. இதில் இரு படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. எஞ்சிய 55 விசைப் படகுகள் இலங்கை வசம் உள்ளன.
புதிய அரசு அமைந்த பின்னரும் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு தொடர்வது குறித்து நம்மிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு சங்கத் தலைவர் என்.ஜே. போஸ், ''குறைவான கடல் பரப்பு, அருகி வரும் மீன் இனம், அதிகரித்து வரும் மீனவர்கள் எண்ணிக்கை... இவற்றுக்கு மத்தியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மாற்றுத் தொழில் ஏதும் இல்லாததால், மீன்பிடிப்பை மட்டுமே நம்பியிருக்கிறோம். இந்த நிலையில் இலங்கைக்கடற்படையினரின் சிறைப்பிடிப்பு நடவடிக்கை மோடி தலைமையிலான அரசு அமைந்தவுடன் கட்டுப்படுத்தப்படும் என முழுமையாக நம்பினோம். இதனை உறுதிசெய்யும் வகையில் பி.ஜே.பி-யினர் கடல் முற்றுகைப் போராட்டம், கடல் தாமரை ஆர்ப்பாட்டம் என பலவற்றை எங்களுக்கு ஆதரவாக நடத்தினர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இப்போது மீனவர் பிரச்னைக்கான காரணம் குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கின்றனர். ஆட்சிக்கு வரும் முன் பேசியது ஒன்றாகவும், இப்போது வேறு விதமாகவும் பி.ஜே.பி-யின் நடவடிக்கை உள்ளது. இதனால் புதிய ஆட்சி வந்தால் நன்மை பிறக்கும் என்ற எங்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது.கடந்த கால காங்கிரஸ் அரசின்போது சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள் காலதாமதமாக விடுதலை செய்யப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்டவர்களுடன் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டன. மேலும், தமிழக முதல்வரின் கறார் நடவடிக்கைகளாலும் எங்கள் படகுகள் மீட்கப்பட்டன. ஆனால், இப்போதோ மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இலங்கை அரசின் பிடியில் 55 விசைப் படகுகள் உள்ளன. இரு படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. எங்கள் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகளை இழந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இந்த மீனவக் குடும்பங்கள் பசியாற ரேஷன் அரிசியை நம்பியிருக்கின்றனர். மேலும் பல மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைக்கூட கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாததால் ஏற்படும் அவமானத்தால், எங்கள் மீனவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் மீனவர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு புதிய அரசிடம் உள்ளது. மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளோம். ஆனால், இதனை ஆள்பவர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எனவே, சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்பதுடன் எங்கள் படகுகளையும் உடனடியாக மீட்டுத் தர வேண்டும்.
இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களுக்கு நம் நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது. இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, சிறைப்பிடிக்கப்படும் இரு நாட்டு மீனவர்களையும் எவ்வித நிபந்தனைகள் இன்றி அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டால் மட்டுமே எங்கள் வாழ்க்கை வளமாகும்'' என்றார்.

No comments: