Monday 21 July 2014

பிசாசு போய், பேய் வந்தது... டும் டும் டும்!

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக ஆயிரம் அநியாயங்களை செய்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் என்கிற ஒன்றின் மூலமாக... ஓரளவுக்கு விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதை உறுதிப்படுத்தவே செய்தார் மன்மோகன் சிங்.
'விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தும்போது, கிராமப்புறங்களில் சந்தை விலையில் 4 மடங்கும்... நகர்ப்புறங்களில் 2 மடங்கும் விலையாகக் கொடுக்கப்பட வேண்டும்' என்பதுதான் அந்த உத்தரவு. 'இதை உடைத்தே தீருவது' என்று பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரும் தொழிலதிபர் கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அப்போதே திரிந்தது. ஆனால், விவசாயிகளின் ஓட்டு வங்கி மீதான அன்பு காரணமாக, தொழிலதிபர்களின் நெருக்கடிக்கு பணியாமல் போக்குக் காட்டினார் மன்மோகன் சிங்.
தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வந்தமர்ந்திருக்கும் நிதின் கட்கரி, மூச்சுக்கு முந்நூறு தடவை இந்த சட்டத்தை திருத்துவோம்... என்றே பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது, இதில் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு, பன்னாட்டு... இந்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்களைச் செய்வதுதான் அவருடைய ஒரே குறிக்கோள். இதற்கான வேலைகளில் படுமும்முரமாக இருக்கிறார் நிதின் கட்கரி
ஆகக்கூடி, ஒரு எமனை இழுத்து வருவதற்குத்தான் காங்கிரஸ் அரசு கடந்த காலத்தில் அத்தனை பிரயத்தனம் செய்தது. 'காங்கிரஸ் செய்த தவறுகளைச் செய்ய மாட்டோம். அதற்கு தீர்வுகளைக் காண்போம்' என்று சூளுரைத்த மோடி, பிறகு எதற்காக காங்கிஸ் அரசு செய்த அதே தில்லுமுல்லு திருகுதாளங்களைச் செய்ய வேண்டும்?
உண்மையில் கதர் கால அநியாயங்களைத் துடைக்க வேண்டும் என நினைத்தால், ஓயாமல் இந்திய பாரம்பர்யம் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கும் பிஜேபியும், அதன் பிரதமர் மோடியும் என்ன செய்திருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய விதைகளின் மூலமே பன்னாட்டு வீரிய விதைகளை மிஞ்சிய மகசூலை அள்ளும் விவசாயிகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டுமாடுகள் மூலமாகவே போதுமான இயற்கை உரத்தைப் பெற முடியும் என்பதை நிருபித்துக் கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளையெல்லாம் பார்த்து பாடம்படித்து, எங்களுக்கு அந்நிய தொழில்நுட்பமான மரபணு மாற்று விதைகள் தேவையில்லை என்று பாரம்பரிய விதைகளை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும். பன்னாட்டு மாடுகள் தேவையில்லை, உள்நாட்டு மாடுகளே போதும் என்று அவற்றை பெருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லையே!
கேட்டால், '120 கோடி இந்தியர்களுக்கு உணவு புகட்ட, பாரம்பரிய விவசாயத்தால் முடியாது' என்று பசுமைப் புரட்சியின் அப்பாக்களும் அம்மாக்களும் முப்பது நாற்பது ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கும் அதே வாந்தியை மறுபடி மறுபடி எடுக்கிறார்கள், விஞ்ஞானிகள் என்கிற பெயரில் திரியும் அஞ்ஞானிகள் சிலர்.இங்கே திருமணங்களிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும், நட்சத்திர உணவு விடுதிகளிலும், லட்சக்கணக்கான உணவு விடுதிகளிலும் தினம் தினம் சமைக்கப்பட்டு, உண்ணாமல் வீணடிக்கப்படும் உணவைக் கணக்கிட்டால், இன்னும் ஒன்பது இந்தியாவுக்கு உணவிட முடியும். இப்படி வீணடிப்பதைக் கட்டுப்படுத்தினால், வெட்டிச் செலவுகளும் மட்டுப்படும்இதையெல்லாம் விட்டுவிட்டு, இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!
இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!வாலு போய் கதி வந்தது...டும் டும் டும்...பிசாசு போய், பேய் வந்தது... டும் டும் டும்!
பின்குறிப்புஇன்னுமொரு இடியையும் இறக்கியிருக்கிறது மோடி அரசு. 'அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு இதுநாள் வரை ஊக்கத் தொகையை தந்து கொண்டிருந்த மாநில அரசுகள் இனி கொடுக்கக் கூடாது' என்பதுதான் அந்த உத்தரவு.அரிசி, கோதுமைக்கு... மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகை கொடுக்கப்படுவதற்குக் காரணமே... நாட்டுக்கே உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றத்தான். இதுவும்கூட சொற்பமே. இதையும்கூட கொடுக்கக் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் மோடி.'இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளிடம் நிலங்களை மொத்தமாக அடகு வை' என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் மறைமுக உத்தரவு. இதை கடைசி வரை மன்மோகன் சிங் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் இதைக் கையில் எடுத்துவிட்டார் மோடி.-ஜூனியர் கோவணாண்டி.

1 comment:

AYYANARSAMY.R said...

TRUTH ALONE TRIUMPHS - BUT THE MASS BELIEVES THE SALT AS DIAMOND - WHEN WILL THE MASS REALIZE THE KILLING TIGER WHICH IS BEHIND THE MASK OF COW...? PAST AND PRESENT P.M'S ARE UNDER THE CONTROL OF NATIONAL AND INTERNATIONAL BIG CORPORATES NOT IN THE CONTROL OF OUR BELOVED BEST REAL INDIAN CONSTITUTION.

AYYANARSAMY.R