Tuesday, 15 July 2014

காமராஜர் பிறந்தநாள்: ஜூலை - 15 . . .

கர்ம வீரர் எனப் பிரியத்துடன் அழைக்கப்பட்டவர் காமராஜர். 1903-ம் ஆண்டு ஜூலை 15 ல் விருதுநகரில் ஒரு தேங்காய் வியாபாரியின் மகனாகப் பிறந்தார். அவருடைய அப்பா குமாரசாமி. அம்மா சிவகாமி அம்மாள் .தனது 16-ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1930-ல் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையிலான உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார்.விருதுநகர் அஞ்சலகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவருக்காக வரதராஜுலு நாயுடுவும் ஜார்ஜ் ஜோஸபும் வாதாடி வெற்றிபெற்றனர். ஆனால் 1940-ல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்தபோது விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர சமூகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்தபோது காமராஜருக்குக் கல்வியின் அவசியம் புரிந்தது. தேச விடுதலைக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த காலத்தில் கல்வியைத் தானாய்த் தேடிக் கற்றார்.
பின்னாளில் அவர் முதல்வரான பிறகு அனைவருக்கும் இலவசக் கல்வி என்னும் திட்டத்தைக் கொண்டு வந்தார்நாடு விடுதலை அடைந்த பின்னர் காமராஜர் 1954-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட பக்தவத்சலத்தையும், சி. சுப்ரமணியத்தையும் தனது அமைச்சரவையில் அமைச்சராக்கிக்கொண்டார்.
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற் சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார். ஒரே நபர் கட்சிப் பணியையும் அரசுப் பொறுப்பையும் வகிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 1963-ல் காமராஜர் திட்டம் என்பதைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின்படி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
1965-ல் இந்தியப் பிரதமர் நேரு மறைந்த பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். பிரதமர் பதவி தன்னைத் தேடி வந்த போதும் பெருந்தன்மையுடன் அதை மறுத்த மகா மனிதர் காமராஜர் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று காலமானார்.
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் அவரது மதிநுட்பத்தை வெளிப்படுத்துபவை. எளிய குடும்பங்களின் வறுமை ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தின்றுவிடக் கூடாது எனும் நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தை மாநில அளவில் கொண்டுவந்தார்.

No comments: