ரயில்வே துறையில், தனியாரின் பங்களிப்பு மற்றும் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கும், மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'ரயில்வே துறையில், ரயில்களின் இயக்கம் தவிர, மற்ற அனைத்திலும், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்படலாம்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அந்த வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:ரயில்வே துறை கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதனால், ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பெரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தவும், அன்னிய மற்றும் தனியார் முதலீட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதில், பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார். புறநகர் ரயில் பாதைகள் அமைப்பது, அதிவேக ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சரக்கு ரயில்களுக்கான பிரத்யேக ரயில் பாதைகள் அமைப்பது போன்றவற்றில், தனியார் துறையினர் பாதி அளவும், அரசு பாதி அளவும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படலாம்.
ரயில்வேயில் தனியார் துறை முதலீட்டை அதிகரிப்பது குறித்து, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவும், மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், சமீபத்தில் விவாதித்துள்ளனர்.அதனால், ரயில்வே துறையில், அன்னிய நேரடி முதலீடு மற்றும் தனியார் துறை முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான கொள்கை விவரங்கள், வரும், 8ம் தேதி, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்படும், ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறலாம்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன
No comments:
Post a Comment