Tuesday 17 December 2013

டிசம்பர் 17: தோழர் பாப்பா உமாநாத் நினைவுநாள் . . .


போராட்டமே வாழ்க்கையாக!
 தமது சிறு வயதிலேயே தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு பொன்மலை சங்கத்திடலில் ரயில்வேதொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.ஏராளமான ரயில்வே போராட்டங்களுக்கு வழிகாட்டிட திருச்சி பொன்மலைக்கு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சாற்றல் மற்றும் தலைவர்களின் எளிமையான வாழ்க்கை, தலைவர்களின் அயராது பணியாற்றல் போன்றவைகளால் ஈர்க்கப்பட்ட தோழர் பாப்பா மார்க்சியக் கொள்கைகளின்பால் தமது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார்.ரயில்வே தொழிலாளர் போராட்டங்களின்போது சிறுவயதிலேயே செங்கொடி ஏந்தி போராட்டக்களத்தில் கோஷங்கள் இட்டவாறு சென்றது, அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் என தமது தாயார் லட்சுமி அம் மாளுடன் இணைந்து உதவிபுரிந்தது, கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் பேச்சுகளை கேட்டது அவரது அரசியல் பங்கேற்பை உறுதி செய்தது.
அப்போது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் இளம் தலைவராக விளங்கிய தோழர் ஆர்.உமாநாத் அவர்களுடனான திருமணம், தோழர் உமாநாத் அவர்களின் அரசியல் சொற்பொழிவுகள் மேலும் மேலும் தோழர் பாப்பாவிற்கு அரசியல் ஞானத்தை வளர்த்தது. தோழர் கே.பி. ஜானகி அம்மாள் அவர்களுடன் இணைந்து தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தோற்று வித்து அதன் ஸ்தாபகத் தலைவராக, அகில இந்திய தலைவர்களில் ஒருவராக, புரலவராக தமது இறுதிக்காலம் வரை இயக்கத் திற்கான வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது.அவர் பெண்ணடி மைத்தனத்துக்கெதிராக போராடிய போராட்டங்கள் ஏராளம் ஏராளம்.தர்மபுரி வாச்சாத்தியில் நடைபெற்ற மலைவாழ்மக்கள் பெண் களின் மீது அரசு அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் நடத்திய மிகக் கொடுமையான பாலியல் வன்கொ டுமைக்கெதிராக தமிழகம் முழுவதும் பெண்களை அணிதிரட்டி தலைமையேற்று நடத்திய போராட்டங்கள், நீதிமன்றத்தில் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு நீதிகிடைத்திட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் தோழர் பாப்பா அவர்களின் பங்கு மகத்தானது.
சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னணியில் இக்கொடுமையைக் கண்டித் தும், பாதிக்கப்பட்ட பத்மினிக்கு நீதி கிடைத்திடவும், பத்மி னிக்கு அரசு வேலை அரசு நிவாரணம் கிடைத்திடவும், தோழர் பாப்பா அவர்கள் எடுத்த தொடர் முயற்சிகள் நாடே அறியும்.பிரேமானந்தா ஆசிரமத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிரமத்தில் நடந்த கொலைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பலவேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி, வழக்குகளில் வெற்றிகண்டதில் தோழர் பாப்பாவுக்கு நிகர் அவரே தான்.
மேற்கண்ட அனைத்து போராட்டங்களிலும் கட்சி வழி காட்டு தலின்படி பெண்களை அணிதிரட்டுவதிலும், பிரச்சனைகளில் தீர்வு காண்பதிலும் தீவிர கவனம் செலுத்தியவர். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது பொன்மலைப் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்திட்டம் கொண்டு வருவதிலும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் தலை யிட்டு அனைத்திலும் தீர்வுகாண்பதில் சட்டமன்றத்திலும், அரசியல்கட்சி தலைவர்களோடும், அதிகாரிகளிடமும் இடைவிடாதுபேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றியுள்ளார்.
ஒரு பிரச்சனையில் தலையிட்டால் அதில் வெற்றிகாணும் வரை ஓயமாட்டார். தமது வாழ்நாள் முழுவதும் சமூகப் பிரச்சனைகளிலும், பெண்கள் மீதான பிரச்சனைகளிலும் தலையிட்டு வெற்றிகாணவேண்டும் என்ற தீராத வேட்கைதான் தோழர் பாப்பா உமாநாத் அவர்களை  ஒரு பன்முகப் போராளியாகக் காட்டியது.அவருக்கு நமது வீரவணக்கம்... 

No comments: