Sunday, 29 December 2013

CITU இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .

போக்குவரத்துத் தொழிலாளர் முற்றுகை
அகவிலைப்படியை வழங்க நிர்வாகம் ஏற்பு

அகவிலைப்படி நிலுவையினை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு சீருடையுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப் பினர் இரா.அண்ணாதுரை, போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் சம்மேளன உதவித்தலைவர் வீ.பிச்சை, சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் ஜி.வேலுச்சாமி, மதுரை கோட்டப்பொதுச்செயலாளர் ஆர். வாசுதேவன், தலைவர் ஜி.இராசேந்திரன், பொருளாளர் கனகசுந்தர், விருதுநகர் கோட்டப் பொதுச்செயலாளர் வெள்ளைத் துரை, தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர்.அழகர்சாமி, திண்டுக்கல் கோட்டப் பொதுச்செயலாளர் பால்ராஜ், பொருளாளர் எம்.மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போக்குவரத்து தலைமையக அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தொழிலாளர்கள் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அங்கு வந்த காவல்துறையினர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அகவிலைப்படி நிலுவை வழங்குவோம் என நிர்வாகம் அறிவிக்காமல் திரும்பிச் செல்லமாட்டோம் என்று தலைவர்கள் கூறினர்.இதையடுத்து போக்குவரத்து கழக நிர்வாக பொதுமேலாளர் பால்ராஜ் மற்றும் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அக விலைப்படியை வழங்குவதாக அதிகாரிகள் உறுதிமொழியளித்தனர்.இதையடுத்து மதுரை கோட்டத் தலைவர் ஜி.ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற வாயிற்கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து தலைவர்கள் எடுத்துரைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை இதுகுறித்து கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியைக் கேட்டும், வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள், மூன்று மாத அகவிலைப்படியில் ஒருமாத அகவிலைப்படியை பொங் கல் தினத்திற்குள்ளும், 2 மாத அக விலைப்படியை பிப்.28ம் தேதிக்குள்ளும் வழங்க உறுதிமொழி வழங்கினர். இது போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய மகத்தான இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு இரா.அண்ணாதுரை எம்.எல். கூறினார்.

No comments: