அரசுறவுப் பண்பாடுஅமெரிக்காவில் படும்பாடு
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதரான ஒரு பெண் நடத்தப்பட்ட விதம் இந்தியாவில் நியாயமான கோபத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. அவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரணர்களுக்கு அங்கே எப்படிப்பட்ட மரியாதைகள் கிடைக்கும்? மற்ற நாடுகளில் இருக்கும் தனது அதிகாரிகளும் குடிமக்களும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது அமெரிக்க அரசு. இல்லையேல் அது அமெரிக்காவில் பெரிய பிரச்சனையாக்கப்பட்டுவிடும். ஆனால், தனது மண்ணுக்கு வந்திருக்கிற மற்ற நாட்டவரின் கவுரவம் பற்றி அமெரிக்க அரசு கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே தனது வீட்டு வேலைக்காக என்று அழைத்துச் சென்ற பெண்ணுக்கு, அமெரிக்கச் சட்டப்படி ஊதியம் வழங்க விசா ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அதன்படி நடந்துகொள்ளாமல் குறைந்த ஊதியமே வழங்கினார் என்று அந்தப் பெண் புகார் செய்திருக்கிறார். தனது நாட்டின் சட்டவிதிகளின்படி, தனிப்பட்ட முறையிலான இத்தகைய குற்றச்சாட்டுகளின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கேற்பவே செயல்பட்டிருப்பதாக அமெரிக்கஅரசு கூறுகிறது.பிரச்சனை இப்படியொரு புகாருக்காக நட வடிக்கை எடுக்கலாமா என்பதல்ல; தூதரக மட்டத்திலான ஒரு உயர் அலுவலர் எவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறார் என்பதே ஆகும். இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு குற்றச்சாட்டு; அவர் தப்பிப்போக முயலவில்லை; பதுங்கியிருக்கவில்லை; காரில் தனது குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு செல்ல விருந்தபோது அவரை அமெரிக்கக் காவல் துறையினர் பிடித்ததோடு, கையில் விலங் கிட்டுக் கொண்டுசென்றுள்ளனர்.காவல் நிலையத்தில் அவமானகரமான முறையில் சோதனை நடத்தியதோடு, மோசமான குற்ற வாளிகளோடு இருக்க வைத்துள்ளனர். ஆக, பாலின அக்கறை சார்ந்த மரியாதையோடும் அவர் நடத்தப்படவில்லை.இந்தியாவிலிருந்து சென்ற ஒருவர் இப்படி அவமதிக்கப்பட்டிருப்பது முதல் முறையல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அந்நாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண் டஸ் உட்பட பலரும் இப்படிப்பட்ட அவமதிப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். இப்போதுதான் முதல்முறையாக இந்திய அரசு பல்வேறு எதிர் நடவடிக்கைகள் எடுக்கிற அளவுக்குச் சென்றுள்ளது. அப்போதே இந்தியா தனது எதிர்ப்பை வலுவாகத் தெரிவித்திருந்தால் இன்றைய நிலைமையைத் தடுத்திருக்க முடியும்.ஆனால் அவ்வாறு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க அப்போது தடையாக இருந்தது எது?செல்வாக்குள்ளவர்கள் விசயத்தில் இந்திய அரசின் தற்போதைய எதிர்வினைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால், இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக அமெரிக்கா செல்கிற பலரும் இப்படிப்பட்ட அவமதிப்புகளைச் சந்திக்கவே செய்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம் பெயரோடு ஒருவர் சென்றுவிட்டால், அவர் பல விதமான கெடுபிடிகளுக்கும் உட்படுத்தப்படுவது தொடர்கிறது. அத்தகையோரின் மரியாதையைக் காக்க இந்திய அரசு என்ன செய்யப்போகிறது? அடுத்து, இத்தகைய அதிகாரி கள் தங்களது சொந்தத் தேவைகளுக்காக பணியாளர்களை அழைத்துச்செல்கிறபோது, உரிய ஊதியம் வழங்குகிறார்களா, சட்டப்படி செயல்படுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துகிற ஏற்பாடுகள் இனியேனும் நடைமுறைப் படுத்தப்பட்டாக வேண்டியதன் அவசியத்தைத் தான் இந்தச் செய்தி உணர்த்துகிறது.
No comments:
Post a Comment