Thursday 19 December 2013

அரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். . . .

அந்நிய முதலீடுக்கு அனுமதி, பெட்ரோல் டீசல் விலைகளைத் தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்வது போன்ற அரசின் உரிமைகள் பல நாடாளுமன்ற ஒப்புதலுடனே நம்முடைய நாட்டில் பறிபோயின. ஆனால், மெக்சிகோ நாடாளுமன்றத்தில் அப்படி ஒரு ஒப்புதலுக்காக வாக்கெடுப்பு நடந்தபோது அதிர்ச்சிகரமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு எம்.பி. மெக்சிகோவில் அரசு நடத்தும் பெமெக்ஸ் எண்ணெய் (Pemex oil industry) நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க, அந்த நாட்டு நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோதுதான் அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தது.வட அமெரிக்க எல்லையில் அமைந்திருக்கும் மெக்சிகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் முக்கி யமான தீர்மானமோ, வாக்கெடுப்போ நடக்கும்போது அதை எதிர்க்கும் சில எம்.பி-க்களின் நடவடிக்கை கள் சற்று அதிரடி ரகம்தான். வித்தியாசமாக உடையணிந்து  வருவது, மிமிக்கரி வாய்ஸில் பேசி எதிர்க்கட்சியைச் சூடாக்குவது, காது கிழியும் வரை ஆளுங்கட்சியைக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடுவது எல்லாம் சகஜம்.நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ, ''தனியார் முதலீட்டா ளர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் ஆற்றல் மிகுந்த நவீனமயமாக்கலுக்கும் மிகவும் அவசியம். நாட்டின் பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும் இதனால் பெருகும். இது ஒன்றும் புதிது அல்ல. இது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம். இதனால் அரசாங்கத்துக்குப் பல மில்லியன் கோடி  லாபம் வரும். அது அத்தனையும் மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குப் பயன்பெறும்'' என்று நீண்ட விளக்கம் கொடுத்து, தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கேட்டார்.இதுகுறித்து எதிர்க் கட்சியின் எம்.பி-க்கள் ஒவ்வொருவராக நாடாளுமன்றத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வந்து பேசினர். அப்போது மேடைக்கு வந்த இடதுசாரி ஜனநாயகப் புரட்சிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி-யான ஆன்டோனியோ கார்ஸியா கொனிஜோ ஆவேசமாகத் தனது பேச்சைத் தொடர்ந்தார். முதலில் கழுத்தில் கட்டியிருந்த 'டையைக் கழற்றினார். ஏதோ பேச கஷ்டமாக இருப்பதால்தான் கழற்றுகிறார் என்று அனைவரும் நினைத்தனர்.அதன்பின் சட்டையைக் கழற்றினார். 'எதிர்ப்பைக் காட்டுகிறார்என்று நினைத்தார்கள். பேன்ட், பனியனைக் கழற்றியபோதுதான் விபரீதமான காட்சி அரங்கேறியது. இறுதியில் ஜட்டியுடன் நின்று வீர உரை நிகழ்த்தினார் கொனிஜோ.''ஏற்கெனவே அரசாங்கத்திடம் இருந்த தொலைபேசி நிறுவனம், வங்கி நிறுவனம், வரி வசூலிப்பு நிறுவனம் போன்றவை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. இப்போது அரசிடம் இருக்கும் எரிவாயு நிறுவனத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால் இப்போது நான் நிற்பதுபோலத்தான் நிற்க வேண்டியிருக்கும். தனியாருக்கு நீங்கள் ஒவ்வொன்றையும் இப்படி தாரை வார்ப்பது, என் உடையை ஒவ்வொன் றாக நானே கழற்றி, கடைசியில் வெறும் ஜட்டியுடன் நிற்கிறேனே அதற்குச் சமம். சொல்லப் போனால் இந்த ஜட்டிகூட மிஞ்சாது. இவர்கள் மக்களுக்குப் பணியாற்ற வந்தார்களா? அல்லது தனியார் நிறுவனத்துக்குச் சேவை செய்ய வந்தார்களா?'' என்று விளாசிவிட்டு உட்கார்ந்தார். விசில் சத்தம் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது.பிறகு ஜட்டியுடனேயே நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்து வெளியே வந்தார். நிருபர்கள், ''ஏன் இப்படி செய்தீர்கள்?'' என்றனர்.அதற்கு அவர், ''உடைகளைக் கழற்றிவிட்டு நாடாளுமன்றத்தில் பேசியதால் வெட்கம் இல்லையா என்று கேட்கிறீர்கள். நான் எதற்கு வெட்கப்பட வேண்டும்? அரசிடம் இருக்கும் சொத்துகளை 
எல்லாம் தனியாருக்குத் தரத் துடிக்கும் இந்த அரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். மக்கள் இதை எல்லாம் தட்டிக் கேட்கத்தான் என்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால்தான் கோபப்பட்டு அப்படி நின்றேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்கப்போவது இல்லை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.இவ்வளவு நடந்த பிறகும் அந்த நாட்டில் சபைக் காவலர்கள் வந்து குண்டுக்கட்டாகத் தூக்கி அவரை வெளியில் கொண்டுபோகவில்லை. அந்த அளவுக்கு அங்கு ஜனநாயகம் இருப்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது!
நன்றி ...ஜூனியர் விகடன் .

No comments: