காந்தியை படுகொலை செய்த கோட்சேவை புகழ்ந்து பேசிய தனது கருத்துக்கு மக்களவையில் வெள்ளியன்று BJP உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் வருத்தம் தெரிவித்தார்.மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு BJP ஆளும் மகாராஷ்டிராவில் நடந்த அரசுவிழாவில் புகழாரம் சூட்டப்பட்டது. இதுகுறித்த சர்ச்சை வியாழக்கிழமை மாநிலங் களவையில் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இந்த விவகாரம் மக்களவையிலும் மாநிலங்கள வையிலும் எதிர்க் கட்சிகளால் எழுப்பப்பட்டது.இதனால் முற்பகலில் ஒருமுறை மக்களவை ஒத்திவைக்கப் பட்டது.மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, கோட்சே சர்ச்சை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதனை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். ஆனால் காங்கிரசின் கோரிக்கையை ஆதரித்த ராஷ்டீரிய ஜனதா, திரிணாமுல் உறுப்பினர்கள் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை முற்றுகையிட்டு அவையில் இருந்த சாக்ஷி மகாராஜையும் எதிர்த்துகோஷமிட்டனர்.அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டார்.இதனை அடுத்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்யாநாயுடு, “காந்தியை படுகொலை செய்த நபரை புகழ்பாடுவதை ஏற்க முடியாது. இதனைஅரசு எப்போதும் அனுமதிக்காது” என்றார். இதனை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளி செய்தனர்.இதனைத் தொடர்ந்து பேசிய வெங்கய்யாநாயுடு, அவையில் சிலர் தினம்தோறும் காந்தியை அவமதித்து அவரது கொள்கைகளை சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று கூறினார்.வெங்கய்யா நாயுடுவின் பேச்சை அடுத்து எதிர்க்கட்சியினர் அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கோஷத்தை அடுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அதனை திரும்பப் பெறுவதாக கூறிய சாக்ஷி மகாராஜ்,“கோட்சே பல காலம் முன்னர் மகாத்மாவை கொன்றார். ஆனால் மகாத்மாவின் கொள்கையையே 1984-ல் நடந்த சீக்கிய கலவரத்தில் நீங்கள் கொன்றுவிட்டீர்கள். அவரது கொள்கைகளை காங்கிரஸ் கட்சியே அழித்துவிட்டது” என்றார்.சாக்ஷியின் பேச்சை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரது விளக்கத்தையும், வருத்தத்தையும் ஏற்க மறுத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments:
Post a Comment