Tuesday, 30 December 2014

ராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...

அனைத்து சங்க கூட்டுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் .சவுந்தரராசன் கூறியது வருமாறு:போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 2வது நாளாக வெற்றிகரமாக நடக்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. ஆளும் கட்சியினர் வெளியாட்கள், நேர்காணல் முடித்தவர்கள், பயிற்சி பெறாதவர்கள் போன்றோரை வைத்து மிகக் குறைந்த பேருந்துகளை இயக்குகிறது. ஒரு வழித்தட பேருந்தை 8 வழித்தடத்தில் ஓடச்செய்து, பேருந்துகள் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். பயிற்சி பெறாத தொழிலாளர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது அபாயகரமானது.அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிமனைகள் முன்பும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபடுவார்கள். 2001ம் ஆண்டு போராட்டத்தின் போது 22ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதனை விஞ்சும் வகையில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் கைதாகி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளோம்.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்காமல், தொழிலாளர்கள் மீது அரசு எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையை 11 சங்கங்களும் கூட்டாக எதிர் கொள்வோம். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது அருந்தி இருக்கிறார்களா? என்றெல்லாம் பரிசோதனை செய்திருக்கிறார்கள். என்னென்ன பொய் வழக்குகள் பதிவு செய்யப் போகிறார்கள் என்பது தெரியாது. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.தமிழகத்தின் பிரதானமான மையப்படுத்தப்பட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றன. இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்களை சிறுமைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்டு பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன.தொழிற்சங்க முன்னணி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய ஏதுவாக, கிளை மேலாளர்களிடம் இருந்து முகவரி பட்டியலை காவல்துறையினர் பெற்றுச் சென்றுள்ளனர்.தந்தை இல்லையென்றால் மகனையோ அல்லது வீட்டில் உள்ள ஒருவரையோ கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.ராணுவ ஆட்சியில் நடப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறும். அரசு, அமைச்சரின் அலட்சியம் காரணமாகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments: