Friday 5 December 2014

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந்தது . . .

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார். எர்ணாகுளத்தில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவ மனையில் அனுமதிக்கப் படிருந்த அவர் வியாழனன்று,.  4.12.14 மாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த  நவம்பர் 24 அன்று அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 100.வழக்கறிஞர், பொதுநலவாதி, ஐக்கிய கேரளத்தின் முதல் உள்துறை-சட்ட அமைச்சர், நீதிபதி, நீதியின் காவலன் என்று பல்வேறு நிலைகளில் ஒரு நூற்றாண்டு காலம் இந்திய சமூகத்தில் நிறைந்து நின்றவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
வைத்தியநாதபுரம் ராமய்யர் கிருஷ்ணய்யர் என்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர் 1915 நவம்பர் 15 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள வைத்திய நாதபுரத்தில் வழக்கறிஞர் வி.பி.ராமஅய்யர், நாராயணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் இண்டர்மீடியட் கல்வியை நிறைவு செய்த கிருஷ்ணய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி. பட்டமும், சென்னைப்பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்புப் பட்டமும் பெற்றார். 1938ல் மலபார்-கூர்க் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதில் பெரும்பங்காற்றினார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு சட்ட உதவிகள் செய்தார் என்ற வழக்கில் 1948ம் ஆண்டு ஒருமாத காலம் சிறையிலடைக்கப்பட்டார்.
1952ல் கூத்துப்பறம்பு தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய கேரளத்தில் 1957ல் நடைபெற்ற முதல் தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். E.M.S அமைச்சரவையில் சட்டம், உள்துறை, சிறைத்துறை, சமூக நலம், மின்சாரம், நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றினார்.விமோசன சமரம் என்ற பெயரில் .எம்.எஸ் அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்பு 1959ம் ஆண்டு முதல் மீண்டும் வழக்கறிஞர் பணியில் கவனம் செலுத்தினார். 1968ல் உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். 1970ல் இந்திய சட்டக் கமிஷன் உறுப்பினரானார். 1973ம் ஆண்டு ஏழைகளுக்கு சட்ட உதவி வழங்குவது சம்பந்தமாக அமைக்கப்பட்ட மத்தியக் குழுவின் தலைவரானார். 1973ம் ஆண்டு ஜூலையில் உச்சநீதிமன்ற நீதிபதியானார். 1980ம் ஆண்டு நவம்பர் 14 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1987ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆர்.வெங்கட்ராமனை எதிர்த்துப் போட்டியிட்டார்.சட்டங்கள் குறித்த பல்வேறு நூல்கள் உள்பட 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். வான்டரிங் இன் மெனி வேர்ல்டு என்ற சுயசரிதையும் 3 பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1999ல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் சட்ட உலகில் வாழும் சகாப்தம் என்ற விருது வழங்கி சிறப்பித்தது. மூன்று பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர்பட்டமும், மேலும் பல்வேறுவிருதுகளும் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு வழங்கப்பட்டது. இவரது மனைவி சாரதா 1974ல் காலமானார். இவருக்கு ரமேஷ், பரமேஷ் என்ற மகன்களும், லதா, இந்திராணி என்ற மருமகள்களும் உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தனது 100-வது பிறந்த தினத்தை கொண்டாடிய முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது:முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மனித உரிமைக்கான வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்டக்கமிஷன் உறுப்பினர், உச்சநீதிமன்ற நீதிபதி என பன்முகப்பணிகளில் திறம்பட பணியாற்றியவர்.தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் நலன்களுக்காகவும் உழைத்தவர். தனக்கு கிடைத்த அதிகாரத்தை நலிவுற்ற மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தத் தவறாதவர்இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்து பொதுநல வழக்காடும் முறையை 35 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கி அதை ஊக்குவித்த பெருமை முன்னாள் நீதிபதிவி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுக்குப் பிறகும் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.அவரது இழப்பு தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு நமது BSNLEU மத்திய, மாநில, மாவட்ட சங்கங்கள் அஞ்சலி  செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா