Monday, 29 December 2014

ஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருதா?

இது சர்வதேச நிதிமூலதனம் கோலோச்சும் காலம். உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக முதலாளித்துவம் முயற்சி செய்கிறது. நெருக்கடி காரணத்தால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது.கூலி வெட்டப்படுகிறது. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இருக்கும் உரிமையைப் பாதுகாக்கும் போராட்டம் நவீன தாரளமயத்திற்கெதிரான போராட்டமாக மாற வேண்டும். இது ஏகாதிபத்தியத் திற்கு எதிரான போராட்டமாக உருப்பெற வேண்டும்.  
மதவெறி மனிதகுலத்தின் எதிரி
சமீபத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகள் 160 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எந்த மதத்தின் பின்னணியில் வந்தாலும் மதவாதத்தை, மதவெறி பயங்கரவாதத்தை நிராகரிக்க வேண்டும். தலிபான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கும், சவூதி அரேபியாவின் பங்கும் உள்ளது.மதவெறி என்பது மனிதகுலத்தின் எதிரி. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கடந்த காங்கிரஸ் அரசும், இன்றைய பாஜக அரசும் தயாரில்லை. ஏனெனில். இஸ்ரேலுக்கு குடைபிடிக்கும் நாடாக அமெரிக்கா இருப்பதே இதற்குக் காரணமாகும்.
காட்டிக்கொடுத்தவர்களா தேசபக்தர்கள்?
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியரான நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். 4 மாநிலங்களில் முதல்வர்களாகவும், இந்திய கேபினட்டில் அமைச்சர்களாகவும் ஆர்எஸ்எஸ்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்ற மேடையில் நின்றுகொண்டு, இந்துத்துவா எங்கள் குடும்பம் என வெங்கையா நாயுடு சொல்லும் அளவிற்கு தைரியம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சி கைக்கு வந்த இறுமாப்பில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்குகிறார்கள்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பார்வை யாளராக இருந்ததையும், போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு வாஜ்பாய் பட்டியல் தந்ததையும் பிரண்ட்லைன் ஏடு வெளிப்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பிதாமகன் எனக் கூறப்படும் கோல்வால்கர் அந்தமான் சிறையில் வாடிய தாக கூறுகிறார்கள்.பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு இந்தியா இளைஞர்களை நல்வழிப் படுத்துவேன் என்று கடிதம் எழுதியவர்தானே இந்த கோல்வால்கர்? பகத்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்றுஅவரது தந்தை எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்தானே கோல்வால்கர்?வரலாற்றின் எந்த இடத்திலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையோ, அமெரிக்க ஏகாதிபத்தியத் தையோ எதிர்க்கவில்லை.
சம்பளம் கேட்காதே என்று சொல்வதுதானே கீதை?
இந்தியாவிற்கு ஜனவரி மாதம் ஒபாமா வருவதற்காக சிவப்புக் கம்பள வரவேற்பளிக்க இன்சூரன்ஸ் துறையைச் சீர்குலைக்கும் அவசரச்சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றம் நடந்து முடிந்த அடுத்த நாள் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே படுகொலை செய்திருக் கிறார்கள். பகவத்கீதையை இந்தியாவின் பொதுநூலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடமையைச்செய்; பலனை எதிர்பாரதே எனக்கூறும் கீதையின் உபதேசத்தை அதானியிடமோ, டாடா, பிர்லா விடமோ மோடி சொல்ல முடியுமா? சம்பளம், போனஸ், குறைந்தபட்ச கூலி ஆகியவற்றைக் கேட்காதே என்பது தான் கீதை சொல்வது. நமது வாழ்வுரிமை மீது தாக்குதலை நடத்தும் பாஜகவின் மதவெறிக்கு எதிராக அனைத்து இடதுசாரி சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும், அறிவுஜீவிகளையும் ஒன்றிணைப்போம். - .வாசுகி

No comments: