தனக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்புகள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வைத்த கோரிக்கையை ஏற்க மெஹ்சானா காவல்துறை மறுத்து விட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்ட உள்ளூர் புலன் ஆய்வுப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அவருடைய கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று அது கூறியுள்ளது. இதுகுறித்து அவருக்கு எழுத்துப் பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று மெஹ்சானா மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் ஜே. ஆர். மோத்தாலியா தெரிவித்துள்ளார்.நவம்பர் 24 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை மனுவில் யசோதா பென்அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அரசு பிறப்பித்த உண்மையான உத்தரவின் நகல் உள்ளிட்ட, அரசு நடைமுறைப்படி அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த பல்வேறு ஆவணங்களை தனக்கு அளிக்கும்படி கேட்டிருந்தார். பிரதமரின் மனைவிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அரசியல் சட்டம் கூறும் விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும் பதில் அளிக்கும்படி அவர் கேட்டிருந்தார். மேலும் மரபு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறும், அதற்குள் அடங்கியிருப்பவை என்னென்னவென்றும், அந்த மரபு நடைமுறைப்படி தனக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். நடைமுறையில் உள்ள பாதுகாப்பு அமைப்பை மட்டும் அவர்வினவியுள்ளார். பாதுகாக்கப்பட வேண்டியவர் பொது பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், பாதுகாப்பு படையினர் அரசுக்கார்களிலும், வாகனங்களிலும் தொடர்வது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய சொந்த மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்த அவர் தனது பாதுகாப்பு படை வீரர்கள் குறித்தும் தனது மனுவில் அச்சம்தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாதுகாப்பு வீரரும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவை தன்னிடம் அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் ஆசிரியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சகோதரர் அசோக் மோடியுடன் மெஹ்சானா மாவட்டத்தின் ஊஞ்சா நகரில் வசித்துவருகிறார். மெஹ்சானா காவல்துறை ஆயுதமேந்திய காவலர்களுடன் பத்து காவலர்களை அவருடைய பாதுகாப்புக்கு நியமித்துள்ளது. அவர்கள் இரண்டு ஷிப்ட்டுகளில் பணி யாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment