அடி விழப்போகிறது என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து ஏற்படுத்துவதன் மூலம், உண்மையாகவே அடி விழும்போது அதை மவுனமாக ஏற்கவைப்பது ஒரு உத்தி. அந்த உத்தியைத்தான் அதிமுக அரசு குதர்க்கமான முறையில் கையாண்டிருக்கிறது. மின் கட்டணஉயர்வு தொடர்பாக சில ஆங்காங்கே பெயரளவில் நடத்தப்பட்ட பொது விசாரணைகள், மின்வாரியம் கட்டணங்களை உயர்த்தியாக வேண்டும் என்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வற்புறுத்துவதாகத் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திகள்,ஒருவேளை கட்டணம் உயர்த்தப்படுமானால் ஏழைகள் பாதிக்கப்படாமலிருக்க மானியம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் கூற்று என அந்த மனநிலை ஏற்படுத்தப்பட்டது.ஆயினும் திடீரென 15 சதவீத மின் கட்டண உயர்வு என்ற அறிவிப்பு மனதளவில் தயாராக இருந்த மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இது ஏதோ ஆணையத்தின் கட்டளைப்படி தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சுயேட்சையாக எடுத்த முடிவு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் படுவது மக்களை கிண்டல் செய்வதேயாகும்.ஆணையம், நிறுவனம் இரண்டின் அதிகாரிகளும் மாநில அரசு விரும்பாமல் சுயேட்சையாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது என்பது மக்களுக்குத் தெரியும்.வேடிக்கை என்னவென்றால், ஆணையம் இப்படியொரு முடிவை எடுக்கவில்லை, கட்டண உயர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டமே நடக்கவில்லை என்று ஆணைய உறுப்பினர் ஒருவரே தெரிவித் திருப்பதாக செய்தி வந்துள்ளது! அரசுத்துறையிலேயே மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது என்பது இந்த அரசு எடுத்த முடிவுதான் என்பதை மறைத்துவிட முடியாது.இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான கூடுதல் கட்டணத்தை அரசு மானியமாக வழங்கும் என்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது. மானியம் என்பதுஎப்போது வேண்டுமானாலும் விலக்கிக் கொள்ளப்படலாம் என்பதால் அது ஒரு பசப்பல்வேலையே. மேலும், அரசு மானியமாக நிதிச் சுமையை ஏற்க முடிகிறது என்றால், கட்டணத்தை உயர்த்த வேண்டியதில்லையே என்ற கேள்வியின் நியாயத்தையும் தள்ளிவிடுவதற்கில்லை.சிறு-நடுத்தரத் தொழில்கள் மின்வெட்டு, கட்டண உயர்வு என்ற இருமுனைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.மின்சார உற்பத்தி யை தனியார் லாப வேட்டைக்களமாக மாற்றவும், அரசின் பொறுப்பைக் கழற்றிவிடவும் முன்பு வாஜ்பாய் அரசு கொண்டுவந்த மின்சார சட்டம்
(2003), இந்தச் சட்டத்தை தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளுமே எதிர்க்கமுன்வராதது, மத்திய அரசு மின்சார மேம்பாட்டுக் காக என வழங்கியுள்ள கடனுக்கான வட்டி (சுமார்ரூ.8475 கோடி), அதைத் தள்ளுபடி செய்யு மாறு கோராதது, நான்கு பெரிய தனியார் நிறுவனங்களுக்கு, அவற்றின் மொத்த முதலீட்டை விடவும் நான்கு மடங்கு அதிகமாக அளிக்கப்பட்டுவிட்ட நிலைக்கட்டணத்தை (சுமார் ரூ.13,000 கோடி)நிறுத்தத் தயங்குவது ஆகியவை இந்த கட்டண உயர்வுக்கான முக்கியக்காரணங்களாகும். இக்காரணங்களைக் களைகிற அரசியல் உறுதியை, மக்களின் போராட்டங்கள்தான் அரசுக்கு ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment