Saturday 7 March 2015

மார்ச்-9ல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் AIIEA வேலைநிறுத்தம்...

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை அதிகரிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து மார்ச் 9 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை அதிகரிக்கும் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா-2008 மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, காத்திருப்பில் உள்ளது.இந்நிலையில் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு மாறாக, பாஜக அரசு மார்ச் 3 அன்று மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனையும் மீறி மார்ச் 4 அன்று மசோதாவை நிறைவேற்றியது.இதனைக் கண்டித்து ஊழியர்கள் வெள்ளியன்று (மார்ச் 6) சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.இப்போராட்டத்தில் பேசிய தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், “இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை மேலும் அதிகரிக்கும் வகையில், நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறி இன்சூரன்ஸ் திருத்த மசோதா மக்களவையில் சட்டமாக்கப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து மார்ச் 9 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும். இந்த வேலை நிறுத்தத்தில், இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றக் கூடிய 1.5லட்சம் ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.” என்றார்.“இந்தியாவிற்குள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கு உதவிடவில்லை. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாப்பதுதான் நாட்டிற்கும், பாலிசிதாரர்களுக்கும் நன்மை தரும்என்றும் அவர் கூறினார்.“இந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், மசோதாவை மாநிலங்களவையில் அல்லது இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தால், மக்களைச் சந்தித்து ஆதரவு கோருவது உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும்என்றும் சுவாமிநாதன் கூறினார்.

No comments: