Wednesday 4 March 2015

மாநிலங்களவை மசோதாவை பறித்துச் செல்வதா?- யெச்சூரி .

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை திடீரென்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்திருப்பது நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டதுதானா என்பதை இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டுமென மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார். இந்தப்பிரச்சனையில் முடிவெடுப்பதற்கு முன்பு நாடாளுமன்ற விதிகளையும் அரசியல் சாசன விதிகளையும் ஆராய வேண்டிய தேவை உள்ளது என அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மையை முற்றிலும் தவறாக அரசு பயன்படுத்துகிறது எனக்குற்றம் சாட்டினார்.
மாநிலங்களவையை எந்தவிதத்திலும் மதிக்காமல் அதன் மாண்புகளை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது எனக்குறிப்பிட்ட அவர், “இன்சூரன்ஸ் மசோதா இன்னும் மாநிலங்களவையின் சொத்தாகவே இருக்கிறது; மாநிலங்களவையின் சொத்தாக இருக்கும் ஒரு பொருளை அரசு வலிந்து பறித்துச் சென்றிருக்கிறது; இது மாநிலங்களவையின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பே ஆகும்என்று கடுமையாக விமர்சித்தார்.“மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்யும் பொருட்டு திரும்பப் பெற்றுக்கொள்வது தேவையில்லை என அரசு தற்போது கருதுகிறது;அப்படியானால், கடந்த வாரம் இந்த மசோதாவை திரும்பப் பெற்றுக்கொள்வதற்காக மாநிலங்களவையில் ஏன் ஒரு தீர்மானத்தை அரசு முன்மொழிந்தது?” என்றும் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார்.இதேபோன்ற கருத்தினை காங்கிரசின் ஆனந்த் சர்மா, சமாஜ்வாதிக் கட்சியின் நரேஷ் அகர்வால், திரிணாமுல் கட்சியின் தெரிக் பிரய்யன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். (பிடிஐ)                                                        





இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை விதிகளை மீறி மக்களவையில் அறிமுகம் செய்த மத்திய அரசைக் கண்டித்து செவ்வாயன்று நாடு முழுவதும் அனைத்து எல்ஐசி அலுவலகங்கள் முன்பும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் .சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களவையில் மசோதாவை நிறைவேற்றினால், அதற்கடுத்த நாள் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்த அவர், இதுதொடர்பாக மக்களிடம் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார்..

No comments: