சொந்த நாட்டுக்கடலில் உப்புக்காய்ச்ச அந்நியர்கள் தடைவிதித்தபோது, அன்றைக்கு மகாத்மா காந்தி தண்டிக்கு பாதயாத்திரை நடத்தினார். இன்றைக்கு நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டு கறைபடிந்து நிற்கும் மன்மோகன் சிங் வீட்டிற்கு ஆதரவு யாத்திரை நடத்துகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ஒட்டுமொத்த காங்கிரசும் மன்மோகன் சிங் பின்னால் நிற்பதாக அவர் உசுப்பேற்றியுள்ளார். மன்மோகன் சிங் மீது புகார்கள் எழுந்தபோதெல்லாம் இதே வார்த்தையைத்தான் சோனியா காந்தி கூறினார். இப்போது மன்மோகன் சிங் வெளியே சொல்லாவிட்டாலும் மனதுக்குள் இப்படி நினைத்திருப்பார்
“இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பை ரணகளமாக்கிட்டீங்க...” என்று.ஐக்கிய முற்போக்கு கூட்டணி- 1 அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிக் கட்சிகள் தன்னை கொத்தடிமை போல நடத்தியதாக குமுறிக் கொந்தளித்தார். 100நாள் வேலைத்திட்டம் போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்று கூறியதற்காகத்தான் இவ்வாறு குறைபட்டுக் கொண்டார்.ஆனால் தனது பத்தாண்டுகால ஆட்சி முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் இவர் கரசேவை செய்து வந்தார். அதனுடைய விளைவுதான் இப்போது அழைப்பாணையாக வந்து சேர்ந்திருக்கிறது. குற்றவாளிகள் பட்டியலில் மன்மோகன் சிங் பெயர் மட்டும் இல்லை. இந்தியாவில் பெருமுதலாளிகளில் ஒருவரான ஹிண்டால்கோ நிறுவனத்தின் அதிபதி குமாமங்கலம் பிர்லாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.முதலாளிகளை குற்றவாளிகள் போல நடத்தினால் தொழில்வளர்ச்சி பாதிக்கும் என்று பாஜக ஏற்கெனவே பதறியது. இப்போது என்னசொல்லப்போகிறார்களோ தெரியவில்லை.இந்தியாவின் பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோதுதான் தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங். நரசிம்மராவ், ஊறுகாய் வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு மற்றும் ஜே.எம்.எம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டு வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டு, `பெருமை’ப்படுத்தப்பட்டார். அடுத்து, இப்போது மன்மோகன் சிங் அந்த `பெருமை’யை பெற்றிருக்கிறார்.தாராளமயமாக்கல் கொள்கை அடுத்தடுத்து பலி கேட்டு வருகிறது. இப்போது தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்த துடிப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் அழைப்பாணைகள் நிச்சயம். தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டபிறகு சலுகைசார் முதலாளித் துவம் தீவிரமாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறிவந்துள்ளது. அரசியல்வாதிகள், முதலாளிகள், உயர் அதிகாரிகளின் முக்கூட்டே குரேனி கேப்பிட்டலிசம் என்பது. இந்த முக்கூட்டின் குட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருகிறது.- மதுக்கூர் இராமலிங்கம்.
No comments:
Post a Comment