கல்விக் கட்டண உயர்வு மற்றும் போலீசாரின் இனவெறித் தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து 4வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கருப்பின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சமீபத்தில் அந்நாட்டு வெள்ளையின போலீசார் நடத்திய காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலில் கருப்பின இளைஞர்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இனவெறி எண்ணத்துடன் அந்நாட்டுபோலீசார் நடத்தி வரும் இத்தகைய தொடர் தாக்குதல்களை கண்டித்து அமெரிக்கா முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இச்சூழலில் அமெரிக்க போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை கண்டித்தும், கல்வி நிறுவனங்களில் இனவெறி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கல்விக் கட்டண உயர்வை குறைத்து, அனைவருக்கும் இலவச கல்வியை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கைவிடக்கோரியும் அந்நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.இதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டா குரூஸிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் திங்களன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வியாழனன்று 4வது நாளாக தொடர்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு இனவெறிக்கு எதிராகவும், கல்விக் கட்டண உயர்விற்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேகோரிக்கைகளை வலியுறுத்திஅமெரிக்காவின் பல்வேறு முக்கியநகரங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment