Friday 27 March 2015

தமிழகத்திற்கு மோடி அரசு அநீதி அதிமுக மவுனம் ஏன்?

மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மோடி தலைமையிலான பாஜக அரசு கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ள நிலையில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கமால் மவுனம் சாதித்தது. இது மக்களவைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகம். - சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு துணைத் தலைவர் கே.பாலபாரதி
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று (மார்ச் 27) நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாலபாரதி பேசியது வருமாறு: கடந்த ஆண்டிலிருந்து சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மாநில அரசுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வரி வருவாய் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை விலையில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக மாநிலத்தின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பெட்ரோல் விலை ரூ. 2.42, டீசல் 2.25 தான் குறைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுக்கு பெட்ரோல் மூலம் ரூ. 7.75, டீசல் மூலம் ரூ. 7.50 கிடைத்தது. மாநில அரசுக்கு வருமானம் 3 மடங்காகும். நிதிச்சுமையும் மானிய வெட்டும்ஏழை, எளியோரைப் பாதுகாக்க வழங்கப்படும்மானியங்களாலும், நாம் தொடர்ந்து செயல்படுத்தி வரும் சமூக நலத்திட்டங்களாலும் நிதிச்சுமை கூடியுள்ளது. மத்திய அரசு சமூக நலச் செலவினங்கள், சாமானிய மக்களுக்கு கொடுக்கப்படும் மானியங்கள் அனைத்தும் வெட்டிச் சுருக்கப்பட்டு விட்டன. இது நிகர உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 2.1 சதவிகிதத்திலிருந்து 1.71 ஆக சுருக்கப்பட்டுள்ளது.
மத்திய ஒதுக்கீடுகள் சரமாரி வெட்டு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திட்ட ஒதுக்கீடு ரூ. 35,163 கோடியிலிருந்து, ரூ. 29,653 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வறுமை நிவாரண ஒதுக்கீடு ரூ. 6,008 கோடியிலிருந்து ரூ. 5000 கோடியாகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட ஒதுக்கீடு ரூ. 16,000 கோடியிலிருந்து, சரிபாதியாக ரூ. 8000 கோடியாக சுருக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் உப திட்டத்தில் ரூ. 5000 கோடி, தலித் பிரிவினர் உபதிட்டத்தில் ரூ. 12,000 கோடி, பெண்களுக்கான பாலின பாகுபாட்டை களைய வகை செய்யும் திட்டங்களுக்கான நிதி ரூ. 20,000 கோடி வெட்டப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. வரி வசூலிப்பதில்லை என 5,89,285 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது.
நம்பிக்கைகளைத் தகர்த்த14வது நிதி ஆணையம்
மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் தகர்த்துவிட்டன. மத்திய, மாநில அரசுகள் மூலமாக நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளது. சுற்றுலா கட்டமைப்பு மேம்பாடு, ஊராட்சிகள் வலிமைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுள்ளது. ‘வழக்கமான மத்திய உதவி, மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி’ - ஆகியவையும் வருங்காலத்தில் கிடைக்காது. 2014-15ம் ஆண்டில் தமிழகத்திற்கு வருடத்தில் ரூ. 1,137 கோடி அளவில் இழப்பு ஏற்படும்.
தமிழகத்திற்கு அநீதி
கால காலமாக பெற்று வந்த குடிசைப் பகுதி மேம்பாடு, பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாத்தல், கடலோரப் பாதுகாப்பு, சாலைகளைப் பராமரிப்புக்கான நிதி உள்ளிட்ட பணிகளுக்கான மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுவான வரித் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த நிதிப் பகிர்வு ரூ. 4.969 சதவிகிதத்திலிருந்து 4.023 சதவிகிதமாக குறைத்தும், சேவை வரித் தொகுப்பிலிருந்து 5.047 சதவிகிதத்திலிருந்து, 4.101 சதவிகிதமாக குறைத்து 14வது நிதி ஆணையம் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைத்துள்ளது. இவை குறித்து அதிமுக நாடாளுமன்றத்தில் பேசியதா? போராடியதா என்றால் இல்லை. இவ்வாறு பாலபாரதி பேசினார்.(நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடு குறித்து மேலும் சிலகருத்துக்களை பாலபாரதி குறிப்பிட்ட போது முதலமைச்சரும் அமைச்சர்களும் குறுக்கிட்டனர். பேரவைத்தலைவர் தனபாலோ வேறு ஒரு சபையை பற்றி இங்கே பேசவேண்டாம் என்று கூறி வேறு பொருள் பற்றிபேசுமாறு கேட்டுக்கொண்டார்.)---தீக்கதிர் 

No comments: