மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன? - மாநிலங்களவையில் தபன்சென் கேள்வி
நாடு முழுவதும் பல மாநிலங்களில் பணியாற்றும் பல லட்சக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் மார்ச் மாத இறுதியில் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்திட மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கோரினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன்சென் பேசியதாவது:மிகவும் ஆழமான பிரச்சனை ஒன்று குறித்து அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஆசிரியர்களுக்கான முழு ஊதியம் பெறாமல் பல லட்சக்கணக்கான பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பல மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். பள்ளிக் கல்வி அமைப்பை நாடு முழுவதும் இவர்கள்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் வேலை மற்றும் வாழ்வாதாரம் மிகவும் ஆழமான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவர்கள் மாநில அரசுகளின்கீழ் பணியாற்றுகிறார்கள்.
பள்ளிக்கல்வி அமைப்பின்கீழ் மிகவும் குறைந்த ஊதியத்தில்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை ஒரு சில லட்சங்களுக்கு வரும். மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் 53 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் வேலைகளும் வரும் மார்ச் 31உடன் முடிவடைகின்றன.கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இவர்கள் இனி குறைந்தபட்சம் கல்விப் பயிற்சியில் பட்டயதாரராக இருக்க வேண்டும். இதற்கு அவர்கள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள்.
இவர்களுக்கு அத்தகைய பயிற்சியை அளித்திருக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமையாகும். மத்திய அரசிற்கும் இதில் பங்கு உண்டு. மார்ச் 31க்குப் பின்னர், கல்விப் பயிற்சியில் பட்டயம் பெறாத அனைவரும் தாங்கள் பார்த்து வரும் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.இப்போது அவர்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.மார்ச் 31 மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. கால இடைவெளி மிகவும் குறைவு. எனவே, இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
இது, ஒரு சில லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை மட்டுமல்ல, நம் பள்ளிக் கல்வி அமைப்பின் அடித்தளமே கடுமையாக பாதிக்கக்கூடிய பிரச்சனையுமாகும். அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டால், பல்வேறு பள்ளிகளிலும் மிகக்குறைந்த கால அவகாசத்திற்குள், கல்விச் சக்கரத்தைத் தொடர்ந்து இயக்கக்கூடிய விதத்தில், மாற்று ஏற்பாடுகளை எந்த மாநில அரசாலும் செய்ய முடியாது. இந்த ஆசிரியர்கள் சுமார் 20, 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்கள். அவர்கள்தான் வேலையிழக்கப் போகிறார்கள். அவர்களைத் திடீரென்று நீங்கள் தெருவில் தூக்கி எறிந்துவிடக் கூடாது.இவ்வாறு தபன்சென் கோரினார்.தபன்சென் கோரிக்கையை சிபிஎம் உறுப்பினர்கள் டாக்டர் டி.என். சீமா, டி.கே.ரங்கராஜன் மற்றும் எம்.பி.அச்சுதன், ஜர்னதாஸ் பைத்யா ஆகியோரும் வற்புறுத்தினர்.
No comments:
Post a Comment