பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, இந்திய ரயில்வேயில் 1.5லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. கடன் பத்திரங்கள் வழியாக இந்த முதலீடு செய்யப்படும் என்றும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 30ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பொதுத்துறை நிறுவனங்கள் எவ்வாறு லாபகரமாக இயங்க வேண்டும் என்பதற்கு எல்ஐசி நிறுவனம் முன்னுதாரணமாக விளங்குகிறது.அந்த நிறுவனம் ரயில்வேத்துறைக்கு தோள் கொடுக்க முன்வந்துள்ளது என்று பாராட்டியுள்ளார்.ஆனால் காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை மேலும் அதிகரிப்பதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தவர் இவர்தான். மாநிலங்களவையில் அந்த மசோதா நிலுவையில் இருக்கும்போதே நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிராகவும், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் அந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளனர்.எல்ஐசி நிறுவனம் பொதுத்துறையில் இருப்பதால்தான் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறைக்கு தோள் கொடுக்க முன்வந்துள்ளது. தனியார் அல்லது வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனம் ரயில்வேத்துறைக்கு நயா பைசா கூட தர முன்வராது என்பது நாடறிந்த உண்மை. அட்சய பாத்திரம் போல அள்ளித்தருகிற எல்ஐசியை அந்நியருக்கு அடகு வைக்கதுணிந்துவிட்டது மோடி அரசு. காமதேனு போல வற்றாமல் கறந்துகொண்டிருக்கும் காராம்பசுவாம் எல்ஐசியின் மடியை அறுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தர துணிந்துவிட்டார் அருண்ஜெட்லி. கற்பகத்தரு போல கனி தரும் பொதுத்துறையாம் எல்ஐசியின் வேரில் வெந்நீர் ஊற்ற துடிக்கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்.எல்ஐசி நிறுவனத்தை பாராட்டும் அதேவாய்தானே அந்த நிறுவனத்தை சீர ழிக்கும் மசோதாவை முன்மொழிந்தது என்று அருண்ஜெட்லியிடம் கேட்டால் அவர்வடிவேல் பாணியில் இப்படி சொல்லக்கூடும்.--“அது நாற வாய்... இது வேற வாய்...”
No comments:
Post a Comment