Sunday 29 March 2015

பிரதமரிடம் தமிழக M.P.க்கள் முறையீடு . . .

மேக்கேதாட்டுவில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்து முறை யிட்டனர்.  அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட பிரதமர், "தமிழகத்தின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.25 கோடியை கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை முதல்வர் .பன்னீர் செல்வம் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மானத்தின் நகலை தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நேரில் வழங்குவர் என்றும் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.இதன்படி, மக்களவைத் துணைத் தலைவரும், கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினருமான மு.தம்பிதுரை தலைமையிலான நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் 48 பேர், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்பட 4 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தருமபுரி தொகுதி பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினர் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தில்லியில் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்துக்கு வந்தனர். பிரதமர் மோடியைச் சந்தித்து இக்குழுவினர் சிறிது நேரம் கலந்துரையாடினர். பிரதமரைச் சந்தித்த இந்தக் குழுவில் தமிழக பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.அதன் பிறகு, இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறியதாவது: கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் சட்டவிரோதமாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கர்நாடகம் செய்யும் துரோகமாகும்.இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை பிரதமரிடம் அளித்துள்ளோம்.

No comments: