அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வந்தபோது, ரூ.15லட்சம் செலவில் கோட் தயாரித்து அந்த கோட் முழுவதும்தனது பெயரை பொறித்துக் கொண்டு வரவேற்பு வழங்கிய பரமஏழை நரேந்திர மோடிநாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது, “ஏழைகளுக்காகவே ஆட்சி நடத்துகிறோம்,
இது சாமானியர்களின் அரசு “ என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.தேர்தல் பரப்புரையின்போது நான் ஒருடீக்கடைக்காரன் என்று அதானி ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் பறந்து பறந்துசென்று பேசியவர் நரேந்திர மோடி. ஆனால்பொதுவாக நாடாளுமன்றத்தில் நடைபெறும்விவாதத்திற்கு இவர் பதிலளிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தநிலையில், தேர்தல்பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதன்பிறகு எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்க முயன்றநிலையில் பதலளிக்க அவர் அவையில் இல்லை.வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவருவதே தமது அரசின் தலையாய பணியாக இருப்பதாக மோடி கூறியுள்ளார். இதுவரை ஒரு நயாபைசாவையாவது மோடி அரசு மீட்டிருக்கிறதா? தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிநாட்டில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் மீட்டுஇந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15லட்சம் செலுத்தப்போவதாக அள்ளிவிட்டார் மோடி. இவர் ஆட்சிக்கு வந்த பிறகு “அனைவருக்கும் வங்கிக் கணக்குதிட்டம்“ என்று துவங்கப்பட்டபோது, ரூ.15லட்சத்தை போடுவதற்காகத்தான் வங்கிக் கணக்கு துவக்கச்சொல்கிறார் போலும் என்று பலரும் ஆர்வமாக கணக்கைத் துவக்கினர். வங்கியின் பாஸ்புத்தகம் வாங்கியதோடு சரி, யாருடைய கணக்கிலும் இதுவரை மோடி பணம் போடவும் இல்லை,வெளிநாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர் யாரையும் பிடிக்கவும் இல்லை. தூய்மை இந்தியா திட்டம் அனைவருக்கும் வீடு, அரசுப்பள்ளிகளில் கட்டாயக் கழிப்பறை போன்ற திட்டங்களெல்லாம் செல்வந்தர்கள் பலன் பெறுவதற்காக அல்ல, அனைத்துமே ஏழை, எளிய மக்களுக்காகத்தான் என்று மோடி முழங்கியிருக்கிறார். தூய்மை இந்தியாதிட்டம் என்பது மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் விளக்குமாறோடு ஒரு நாள் காட்சியளித்து படத்திற்கு போஸ் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.இதனால்தான் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் சின்னமான விளக்கமாறு சின்னத்தில் மக்கள் வாக்களித்து மோடி வகையறாவை வெளு வெளு என்று வெளுத்தார்கள்.அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டதுபோலவும் இந்திய மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் படுத்து காலை ஆட்டிக்கொண்டிருப்பது போலவும் கதையடிக்கிறார் மோடி. இதுவரை எத்தனை பேருக்கு சொந்த வீடு கிடைத்திருக்கிறது என்று கணக்கு சொல்லத் தயாரா?
இவரது ஆட்சியில் விவசாயிகள்வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டு, வீடு பேறு என்று புராணங்களில் சொல்லப்படும் மேலோகம் போய்ச் சேர்ந்ததுதான் நடந்திருக்கிறது.எதனை அடிப்படையாகக் கொண்டு எனது அரசை பணக்காரர்களுக்கு சாதகமானஅரசு என்று விமர்சிக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேட்கிறார் மோடி. பணக்காரர்களிடமிருந்து சொத்து வரியை வசூலிக்க முடியவில்லை என்று கூறி அந்த வரியையே இந்த பட்ஜெட்டில் ரத்து செய்துவிட்டார்களே அது யாருக்குச் சாதகமான நடவடிக்கை? கம்பெனிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட வரிச்சலுகை கடந்த ஆண்டு 5 1/2லட்சம் கோடி நடப்பு நிதியாண்டில் 6 லட்சம்கோடி. இதில் ஒரு நயா பைசாவாவது கடைக்கோடி சாமானிய இந்தியன் கைக்கு வந்ததுண்டா?கிராமப்புற விவசாயத் தொழிலாளிக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்திற்கு 62 ஆயிரம் கோடி தேவை எனும் நிலையில் 34ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறதே மோடி அரசு. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா? ஆனால் தனக்கு தேர்தல் செலவு செய்த இந்தியாவின் பெருமுதலாளியான அதானியை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று ஆஸ்திரேலிய முதலாளிகளே கட்டுப்படியாகாது என்று கைவிட்ட நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த ஸ்டேட் பேங்கிலிருந்து ரூ.62ஆயிரம் கோடி கடன் தர ஏற்பாடு செய்த ஏழைப் பங்காளன்தான் திருவாளர் மோடி. அதானி என்ன அன்றாடம் 100 நாள் வேலைக்குப்போய் அந்த காசில் உலை வைக்கிற சாமானிய ஏழையா?நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்திருத்தம் கொண்டு வந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலத்தைப் பறித்துபன்னாட்டுமுதலாளிகளுக்கு பந்தி வைத்திட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்மோடி. இதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினாலும் முதலாளிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறார் இந்த சாமானியர். மோடி தனது பேச்சில் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நாமும் அவருக்கு அதையே கூறுகிறோம். இது சாமானியர்களின் அரசு என்று வதந்தியை பரப்பாதீர்கள் திருவாளர் மோடி அவர்களே! ஆவேசமான உரை என்று நினைத்துக் கொண்டு அவர் பாடிய மோடி ராகம் அபஸ்வரமாக ஒலித்து, தாளம் சேராததப்புக் கச்சேரியாக முடிந்துவிட்டது என்பதுதான் உண்மை. - மதுக்கூர் இராமலிங்கம்
No comments:
Post a Comment