*காலனிய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக மக்களின் வாக்குகளில் வெறும் 31 சதவீதத்தை மட்டுமே பெற்று நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் பாசிச சக்திகள் ஆட்சிக்கு வந்துள்ள சூழல் இது.
* 1991 ம் ஆண்டு நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் தொடங்கி வைக்கப்பட்ட நவீன - தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை பெரும் பாய்ச்சலுடன் முன்னேறிச்செல்வதற்கான பாதையைப் பயன்படுத்தி தான் இன்றைய பாசிச மோடி அரசு, இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
முட்டாள் தனமான புத்தகங்கள்
* மறுபுறம், சமுதாயப் பண்பாட்டுத் தளத்தில் இந்துத்வா பாசிசத் தாக்குதல்கள் மிக மும்முரமாக, மிக தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
* வாஜ்பாய் அரசு காலத்திலேயே பாடப்புத்தகங்களில் இந்துத்வா பாசிசப் பிற்போக்கு கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளை வலுப்படுத்தும் கருத்துக்களையும் கொண்ட பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வரலாற்று அறிஞர்களின் புத்தகங்களை தடைசெய்வதில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாதக் காங்கிரஸ் ஒருபுறமும், பாஜக- சிவசேனைக் கூட்டணி மறுபுறமும் போட்டிப் போட்டுக் கொண்டன.
* எவ்வித உயர்கல்வியுமில்லாத ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பத்ரவால் எழுதப்பட்டுள்ள முட்டாள்தனமான புத்தகங்கள் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளன.
*பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டமும், பசுவதைத் தடைச்சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளன.
* மகாராஷ்டிராவில் பாசிச இந்துத்வா அரசு மாடுகளை வெட்டுவதற்கும், மாட்டிறைச்சியை விற்பதற்கும் தடை விதித்துள்ளது. முஸ்லிம்களுக்கு நீதிமன்றம் ஒப்புதல் தந்த 5 சதவீத இடதுக்கீட்டு முறையை ரத்து செய்துள்ளது.
* தில்லியிலும் பிற இடங்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு. அவற்றிலுள்ள பொருட்கள் சூறையாடப்படுகின்றன.
* அனைத்து சமூகத்தினராலும் மதிக்கப்பட்டு வந்த அன்னை தெரசாவைப் பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. ற மேற்கு வங்கத்தில் 75 வயதான மூதாட்டியான கிறிஸ்தவ கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கண்டனம் செய்யாத ஒரே அரசியல் சக்தி சங் பரிவாரம் மட்டுமே.
கொலைக்கருவி ஏந்தும் கோழைகள்
* பாசிச சங் பரிவாரத்தின் பிற்போக்கு, மானுடவிரோத, மூட நம்பிக்கைக் கருத்துப் பரப்புகளை மறுத்து, ஜனநாயக முற்போக்கு மதச்சார்பற்ற கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்பவர்களைக் கருத்துரீதியாக எதிர்கொள்ளும் அறிவுவலிமையோ, மன உரமோ இல்லாத சங் பரிவாரத்தினர் கொலைக்கருவிகளை ஏந்தி கோழைத்தமான கொலைச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
*நேர்மை என்ற சொல்லை மற்றவர்களை விட அதிகமாக பேசுபவர்கள் பாசிஸ்டுகள். ஆனால், மற்றவர்களைவிட அதைத் துச்சமாக கருதுபவர்களும் அவர்கள்தாம். அதனால் தான் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியவுடன், பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வந்த வருமான வரி ஏய்ப்பு வழக்கு முடிவுக்கு வந்தது. அதனால் தான் நிலம் கையப்படுத்தும் சட்டவரைவுக்கு அழையா விருந்தாளி போல, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவளித்தனர்.
* தமிழகத்திலோ, அதிமுகவோ அதனால் ஆளப்படும் தமிழ்நாடு அரசோ தன்னை இந்துத்வா சக்தி என்றோ,பாசிச சக்தி என்றோ அழைத்துக் கொள்வதில்லை. அந்தக் கட்சியின் பதாகைகளில் இன்னும் பெரியார், அண்ணா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாபெரும் தலைவர்களை கேவலப்படுத்தும் வகையில் அமைச்சர்களே பால்குடமும் காவடியும் ஏந்தித்திரிகின்றனர். கட்சி அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு பணியாற்ற வேண்டிய அரசியல் சட்டத்தை மதித்து ஒழுக வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகளும் அதிமுக நடத்தும் யாகங்களிலும், அன்னதான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள்.
* தருமபுரி, சேலம், நெல்லை முதலிய மாவட்டங்களில் நடக்கு சாதி மோதல்களையும், கொலைகளையும் தமிழகத்தின் பல்வேறுஇடங்களில் நடக்கும் கௌரவக்கொலைகளையும் தடுத்து நிறுத்து வதிலோ, அந்தக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவோ சிறிதும் விருப்பமில்லாத தமிழக அரசு, பெருமாள் முருகனும், புலியூர் முருகேசனும் சாதி வெறியர்களால் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆதிக்க சாதிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அடுத்த தேர்தலில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற ஒரே அக்கறை தான் ஆளுங்கட்சிக்கு உள்ளது.
* பண்பாட்டின் இருத்தலுக்கு அறிவுசார்ந்த சிந்தனை மட்டும் போதுமானதல்ல. மாணவர்கள், இளைஞர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில். இந்துத்வா பாசிசம், இளம் உள்ளங்களின் மீது மிகுந்த கவனம் குவிக்கின்றன. முற்போக்கான, ஜனநாயக, புரட்சிகர இசையை தேவைப்பட்டால் இளம் தலைமுறையினர் விரும்புகின்ற இசைக்கருவிகளின் துணையையும் கொண்டு வளர்த்தெடுங்கள்.
*பாசிசத்துக்கு எதிரான போராட்டம் மிகக் கடுமையானது.பாசிசம் என்பது எப்போதுமே பொய்களின் மீது கட்டப்பட்டது தான். எந்தப்பொய்யும் என்றென்றும் நிலைத்திருக்க முடியாது. நாம் வென்று வருவோம். - - எஸ்.வி..ராஜதுரை.
No comments:
Post a Comment