மூடத்தனங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். அதற்கு புத்தகங்கள் தான் ஆயுதம் என்று மேடைக்கலைவாணரும், மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் கூறினார்.திண்டுக்கல்லில் இலக்கியக்களம் சார்பில் நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:-நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் சொர்க்கத்தைப் பற்றிய சிந்தனையில் பலர் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இது மூடநம்பிக்கை. 21-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ராக்கெட், சாட்டிலைட் ஆகியவற்றை தொடர்ந்து விண்வெளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எந்த ராக்கெட்டும் இங்கு வரக்கூடாது என்று சினிமாவில் காட்டுவது போல தேவலோகத்தில் இருக்கிற தேவர்கள், ரம்பை, மேனகை என்று யாரும் தடுத்து நிறுத்தவில்லை. இந்த மண்ணில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று மார்க்ஸ் சொன்னார். அறம் என்றால் என்ன என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் கேட்டால் போய் நோட்சை எடுத்து பார் என்கிறார். பெற்ற பிள்ளைக்கு அறத்தை சொல்லித் தருவது தந்தையின் கடமையல்லவா? இந்த சமூகம் அறத்தின் வழியில் நின்று செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம். நமது வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும். நுனிப்புல் மேயக்கூடாது. இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. அதனால் அதை திருடிச்செல்வதற்கு மீண்டும் வெள்ளைக்காரன் வருவான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் கூறினார். அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பின்லேடனை பிடிக்கப் போவதாகக் கூறிச் சென்ற அமெரிக்கா அங்குள்ள மக்களை பிடித்துக் கொண்டது. நாட்டைப் பிடித்துக் கொண்டது. எண்ணெய் வளங்களைப் பிடித்துக் கொண்டது. எனவே அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் எல்லோரும் பேசுவார்கள். பலரது பேச்சுக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விடும். ஆனால் சட்டமன்றம் தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் ஒரு குறள் வாசிக்கப்படும். அந்தக்குறளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது. திருவள்ளுவனின் குறள் அவ்வளவு பலம் வாய்ந்தது. முற்போக்கு சமூகமாக விளங்கிய தமிழ்ச்சமூகம் மூடநம்பிக்கையில் வீழக்கூடாது. இந்து மதத்தில் கணவன் இறந்த பிறகு மனைவியை உடன்கட்டை என்ற பெயரில் அதே சிதையில் ஏற்றி கொன்றார்கள். ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் அந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடினார்கள். அதனையடுத்து கிறிஸ்தவமதத்தை தழுவிய வெள்ளையர்கள் அதற்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்து, தடை விதித்தார்கள். உடன்கட்டை தொடர்பாக இஸ்லாமிய மன்னரான அக்பர் தனது கடும் ஆட்சேபணையைத் தெரிவித்தார். உடன்கட்டையில் எரிவது எனது சகோதரி என்றார். இஸ்லாமிய மன்னன் என்றாலும் இந்துப் பெண்களுக்காக குரல் கொடுத்தார். இவ்வாறு அவர் பேசினார்.
1 comment:
உண்மைதான் ஐயா
புத்தகத்தினும் சிறந்த ஆயுதம் வேறு ஏது
Post a Comment