Thursday, 4 December 2014

போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

1984 ஆம் ஆண்டு 2 ஆம் தேதி இரவின் விஷவாயுக் கசிவுக்குப் பிறகு, டிசம்பர் 3ஆம் தேதி காலையிலிருந்து பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்று அனைத்தும் கலந்து ஒரு மிகக் கொடுமையான நாடகம் அரங்கேறத் தொடங்கியது. எல்லோரும் பொய் சொன்னார்கள். அனைவரும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையும், ஏமாளியான இந்திய தேசத்தையும் ஏமாற்றினார்கள். இதில் அரசும் முக்கியப் பங்கு வகித்தது என்பதுதான் உலக ஜனநாயக வரலாற்றில் மன்னிக்கவே முடியாத துரோகம்!போபால் யூனியன் கார்பைட் பூச்சிமருந்துத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் மரணமடைந்தவர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள். குற்றுயிரும் கொலையுயிருமாகத் தப்பித்தவர்கள் அதற்குப் பிறகு அனுபவித்த, அனுபவிக்கும் அவஸ்தைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. அவர்கள் மட்டுமா? அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும், குழந்தைகளின் குழந்தைகளும்கூட அல்லவா அந்த விஷவாயு பாதிப்பால் ஏற்பட்ட அவலத்தை எதிர்கொள்கிறார்கள். மிகப்பெரிய புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். லட்சக்கணக்கானவர்கள் மரணத்தின் வாசல்படியை நெருங்கிவிட்டதை உணர்ந்து அலறித் துடித்துக் கொண்டிருக்க, யூனியன் கார்பைட் நிறுவனம் அவர்கள் சுவாசித்த விஷவாயு, அவர்களது கண்களில் எரிச்சலை ஏற்படுத்திய விஷவாயு, வெறும் கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சுப் புகை போன்றதுதான் என்று கதை விட்டதே அதைவிடப் பெரிய பித்தலாட்டம் என்ன இருக்க முடியும்? அதை அந்த நிறுவன மருத்துவரும் ஆமோதித்தாரே, அதைவிடப் பெரிய தொழில் துரோகம் என்ன இருக்க முடியும்?யூனியன் கார்பைட் ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பொய் சொன்னது. ஆனால், மத்தியப் பிரதேச அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசல்லவா? அந்த அரசாவது மக்களின் பக்கம் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டாமா? தன்னுடைய கடமையைச் செய்வதிலிருந்து மத்தியப் பிரதேச அரசை யார் தடுத்தது?
நடந்திருப்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் மரணம். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவன நிர்வாகத்தைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அரசின் கடமையல்லவா? ஒருவர் கொலை செய்யப்பட்டால், கொலையாளி உடனடியாகக் கைது செய்யப்படுகிறார். ஆனால், ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த மோசமான விஷவாயு விபத்துக்காக யூனியன் கார்பைட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட சிறை பிடிக்கப்படவில்லை. விசாரணைக்காகக்கூட அவர்கள் சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் கம்பி எண்ண வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.யூனியன் கார்பைட் நிறுவனமும் அன்றைய முதலமைச்சர் அர்ஜுன் சிங் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசும் ஒருங்கிணைந்து நடத்திய நாடகங்களும், மக்களை ஏமாற்றிய சம்பவங்களும் வெளியுலகத்திற்குத் தெரியாமல் இன்றுவரை அடக்கி வாசிக்கப்படுகிறது.விஷவாயுக் கசிவைத் தொடர்ந்து, ஊடகங்களின் பரபரப்புக்கும் மக்கள் மத்தியில் காணப்பட்ட கொந்தளிப்புக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில், பரபரப்பு ஓய்ந்தவுடன், அந்த விசாரணைக் குழு கலைக்கப்பட்டு விட்டது. கலைக்கப்படுவதற்காக அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைப்பானேன்?யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவிலிருந்து போபாலுக்குப் பறந்து வந்தார். லட்சக்கணக்கானோர் கோபத்திலும், ஆத்திரத்திலும், கொந்தளித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கானோர் உயிரோடு போராடிக்கொண்டும் இருக்கும் நேரத்தில் வாரன் ஆண்டர்சன் என்ன தைரியத்தில், யார் தந்த நம்பிக்கையில் போபாலுக்கு நேரில் வந்தார்? முதலில் அவர் எதற்காக வந்தார்? பாதிக்கப்பட்டவர்களின் அவலத்தைத் தெரிந்து கொள்ளவா, இல்லை, தனது நிறுவனம் பாதிக்கப்படாமல் இருப்பதற்குப் பேரம் பேசவா? இதை இதுவரை யாரும் கேட்டுத் தெரிந்து கொண்டதாகத் தகவல் இல்லை.ஆண்டர்சன் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. ஆண்டர்சனின் கைதும் விடுதலையும் அரசியல் நாடகம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆண்டர்சனும், அவரைக் கைது செய்து உடனே விட்டுவிட்ட அன்றைய முதலமைச்சர் அர்ஜுன் சிங்கும் இன்று உயிருடன் இல்லை. அதனால் ஆண்டர்சனின் கைதும் விடுதலையும் போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வு பேசப்படும் காலம் வரை ரகசியமாகவே இருக்கும்.
இதுபற்றி அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்து ஆண்டர்சனைப் பிணையில் விடுவித்த நீதிபதி மோட்டிசிங் விவரமாகவே எழுதி இருக்கிறார்.
""யூனியன் கார்பைட் தலைவர் வாரன் ஆண்டர்சனும் இன்னும் சில அதிகாரிகளும் மும்பையிலிருந்து (அப்போது பம்பாய்) போபாலுக்கு விமானத்தில் வந்தனர். உடனடியாக அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யூனியன் கார்பைடின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே மூன்று அறைகளில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். என்னையும், காவல் துறை அதிகாரியையும் தலைமைச் செயலர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து, ஆண்டர்சனையும் அதிகாரிகளையும் சொந்தப் பிணையில் விடும்படியும், விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் விமானத்தில் பத்திரமாக ஏற்றி தில்லிக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டார்''.
ஆண்டர்சன் ஏன் போபால் வந்தார் என்பதும், அவர் யூனியன் கார்பைட் நிறுவன ஆவணங்களை எடுத்துச் சென்றாரா என்பதும் மட்டுமல்ல, அவர் பத்திரமாக தில்லிக்குப்போய் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பயணிக்க அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் மாநில அரசின் விமானத்தைத் தந்து உதவினாரா என்பதும்கூட இன்றுவரை விடை காணப்படாத புதிராகவே தொடர்கிறது.விஷவாயுக் கசிவுச் சம்பவம் நடந்து முடிந்த அடுத்த சில நாள்களில் அமெரிக்காவிலிருந்து டஜன் கணக்கில் வழக்குரைஞர்கள் போபாலுக்குப் படை எடுத்தார்கள். அமெரிக்காவில் இந்த வழக்குரைஞர்களுக்கு "ஆம்புலன்ஸ் வேட்டையர்கள்' (அம்க்ஷன்ப்ஹய்ஸ்ரீங் இட்ஹள்ங்ழ்ள்) என்று பெயர். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வழக்குத் தொடுத்து அவர்களுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுப்பதுதான் இவர்களது சிறப்புப் பணி.இந்திய, அமெரிக்க சட்டப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்து, இந்திய வழக்குரைஞர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு, போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் யூனியன் கார்பைடிடம் இழப்பீடு கோரி இந்த வழக்குரைஞர்கள் வழக்குத் தொடுக்கத் தொடங்கினர். யூனியன் கார்பைட் நிறுவனம் தந்த நெருக்கடி காரணமாகவா அல்லது அன்னிய நாட்டு வழக்குரைஞர்கள் இந்தியாவில் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்பதாலா என்பது தெரியாது; ஆனால் இந்திய அரசு இப்படி இழப்பீடு பெற்றுத் தருவதைத் தடுக்க முற்பட்டது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி, போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக இந்திய அரசு தன்னைத்தானே நியமித்துக் கொண்டது. பாதிக்கப்பட்ட நபர்கள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ இழப்பீடு கோர முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் சார்பிலும் இந்திய அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து இழப்பீடு பெற்றுத் தரும் என்றும் அந்தச் சட்டம் தெளிவுபடுத்தியது. இந்திய அரசே பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக இருப்பதைப் புரிந்துகொண்ட "ஆம்புலன்ஸ் வேட்டை வழக்குரைஞர்கள் வருத்தத்துடன் அமெரிக்கா திரும்பினர். அப்படித் திரும்பியவர்களில் ஒருவர் இந்த நயவஞ்சகம் பற்றிப் பல கட்டுரைகளும், புத்தகமும் எழுதி இருக்கிறார்.மாநில அரசு கைவிட்டது. ஓடினார்கள். மத்திய அரசு உதவவில்லை. ஓடினார்கள். ஓடினார்கள், ஓடினார்கள், உச்சநீதிமன்றத்திற்கே ஓடினார்கள் போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள். உச்சநீதிமன்றத்திலாவது அவர்களது ஓட்டத்திற்கும், வாட்டத்திற்கும் பதில் கிடைத்ததா என்றால், அங்கும் கிடைக்கவில்லை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அசிரத்தையால் ஏற்பட்ட விஷவாயுக் கொலைக்களன் மரணத்துக்கு, அதிகாரிகள் தூக்கிலிடப்பட வேண்டாம். தண்டிக்கப்பட வேண்டாமா? குறைந்தபட்சம் கண்டிக்கப்படவாவது வேண்டாமா? அப்பாவிகளின் மரணத்துக்கு அவர்கள் காரணமல்ல என்று கூறி விடுவிக்கப்பட்டனர். அதைவிட வேடிக்கை, போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட அந்த நீதிபதி, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தக் கொடுமையை எங்கேபோய், யாரிடம் முறையிடுவது?
இதேபோன்ற விபத்து அமெரிக்காவில் நடந்திருந்தால் அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்திருந்தால், விபத்துக்குக் காரணமான நிறுவனம் மிகப்பெரிய தொகையை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தர வேண்டியதாகி இருக்கும். தன்னுடைய குடிமக்களைக் காப்பதற்காக அமெரிக்கா எந்த அளவுக்கும் போகத் தயங்காது.ஆனால் அதே அமெரிக்கா, தனது நாட்டு நிறுவனம் ஒன்றின் கவனக்குறைவால் அப்பாவி இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்ததற்காக முதலைக் கண்ணீர்கூட வடிக்கவில்லை. இரங்கல் செய்திகூட அனுப்பவில்லை.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இன்றைய பிரதமரான நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியப் பிரதமர்கள் பலர் பலமுறை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்று வந்திருக்கிறார்கள். அதேபோல பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என்று மூன்று அமெரிக்க அதிபர்கள் போபால் விபத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இந்த விஜயங்கள் ஒன்றில்கூட போபால் விஷவாயு விபத்து பற்றிய விசாரிப்புகூட நிகழவில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு இந்திய அரசு இதைப் பற்றிய அக்கறை காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

No comments: