நாட்டின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 52ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பிகார் மாநிலம், பாட்னாவில் கங்கை நதிக்கரையோரம் உள்ள அவரது சமாதியில், மாநில அரசு சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
டாக்டர் ராஜேந்திர பிரசாத், நாட்டின் விடுதலைக்காகவும், அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் ஆற்றிய பணிக்காகவும் எப்போதும் நினைவு கூரப்படுவார்.
நாட்டிலேயே உயர் பதவியை வகித்ததன் மூலம் பிகாரை பெருமைப் படுத்தியவர் அவர் என்று நிதீஷ் குமார் கூறினார்.
மேலும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் உள்ள ஜிராடேய் கிராமத்தில், கடந்த 1884ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி ராஜேந்திர பிரசாத் பிறந்தார்.
வழக்குரைஞராக பணியாற்றிய அவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டார். 1951ஆம் ஆண்டு நாட்டின் முதல் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1963ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அவர் காலமானார்.
No comments:
Post a Comment