ஜனவரி 30, 1948 – அன்று காந்தி கொல்லப்படுவதற்கு இருபது நாளுக்கு முன்பே கோட்சே உள்ளிட்ட குழு காந்தியை அதே இடத்தில் கொல்ல முயன்றுள்ளது. கையெறி குண்டுகளை வீசி விட்டுத் தப்பி ஓடும் போது மதன்லால் என்கிற நபர் மட்டும் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் தப்பி விட்டனர். போலீஸ் மதன்லாலிடம் விசாரித்தபோது அவர் நான்கைந்து பேர் சேர்ந்து காந்தியைக் கொல்லத் திட்டம் தீட்டியதைச் சொல்லி விட்டார். ஆனால் டில்லி போலீஸ் மற்றும் மும்பைபோலீஸ் மிகத் தீவிரமாக இயங்கி குற்றவாளிகளை அடுத்த பத்து நாளைக்குள் பிடிக்கத் தவறி விட்டது.* காந்தி உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீஸ் சொன்னதை காந்தி ஏற்கவில்லை..கோட்சே முதலில் காந்தியின் கொள்கைகளை விரும்பிய மனிதனாக இருந்தார் என்று அறிய ஆச்சரியமாக உள்ளது. பின் ஹிந்துக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சாவர்கர் என்கிற நபரின் follower ஆகி விட்டார் கோட்சே.* நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்கரே ஆகிய இருவரும் கோட்சே காந்தியைச் சுட்டபோது அவர் உடன் இருந்த நபர்கள். இதில் நாராயண ஆப்தேக்கு தூக்கு கிடைத்தது. கார்கரே உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. .* காந்தியைக் கொல்ல ஒரு நாளுக்கு முன் கோட்சே தன்னுடன் இருக்கும் கார்கரே மற்றும் ஆப்தேக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்புகிறார். காரணம் அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க! வழக்கு நடக்கும் போதும் “நான் தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லை” என கோட்சே வாதிட்டாலும், போலீஸ் ஆதாரத்துடன் அவர்களும் உடன் இருந்ததை நிரூபிக்கிறது.* காந்தியைக் கொல்லப் போகும் முன் முதலில் பர்தா அணிந்து போகலாம் என புது பர்தா வாங்கி முயன்றுள்ளனர். பின் அது சரியாக இல்லை என கோட்சே கூறி ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன் கோட்சே உப்புக் கடலை சாப்பிட ஆசைப்பட, பல இடத்தில் கிடைக்காமல் கடைசியாய் அவருக்கு உப்புக் கடலை வாங்கித் தந்துள்ளனர் அவருடன் இருந்தவர்கள்.* குறிப்பிட்ட தினத்தன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வரும் போது கோட்சே சுட வேண்டும் என்று காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றி காந்தியிடம் பேசியுள்ளார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனை கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாகக் குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார். காந்தியை மேடையில் வைத்துத்தான் சுட கோட்சே எண்ணியுள்ளார். ஆனால் காந்தி வழக்கமாய்ச் செல்லும் வழியை விடுத்து, கோட்சே நின்ற இடம் வழியே செல்ல, அங்கேயே அவரைச் சுட்டார் கோட்சே. மூன்று குண்டுகள் மகாத்மா மார்பைத் துளைக்க அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே கைகளைத் தூக்கியவாறு, “போலிஸ்.. போலிஸ்” என்று கத்தியுள்ளார். மக்கள் வந்து அடித்து விடுவார்களே என்று தான் அவர் போலிசை அழைத்துள்ளார்.* காந்தி இறந்த அன்று ரேடியோவில் காந்தியை ஒரு இந்து சுட்டுக் கொன்றார் என்று திரும்பத் திரும்ப அறிவித்துள்ளனர். அந்த நேரம் இந்து- முஸ்லீம் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்க, காந்தியை ஒரு முஸ்லீம் கொன்றார் என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை பெரிதாகுமே என்று தான் இப்படி அறிவித்துள்ளனர்..
1 comment:
மகாத்மாவின் நினைவினைப் போற்றுவோம்
Post a Comment