Wednesday 28 January 2015

இழந்தது அதிகம்பெற்றது ஒன்றுமில்லை

நமது இந்தியத் திருநாட்டில் குடியரசு நாள் விழாவிற்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி தேச பக்தியும் ஜனநாயக எண்ணம் கொண்டோ ரும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு எந்த அளவுக்கு நியாயமானது என்பதைத்தான் ஒபாமாவின் வருகை உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக இந்தியாவைச் சேர்க்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அதன் ஒரு பகுதியை ஒபாமா வெற்றிகரமாக செய்து முடித்துள் ளார்.அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசினால் அளிக்கப்பட்ட வரவேற்பும், தடபுடலும் சமமான மரியாதையும் நட்புறவும் கொண்ட ஒரு நாட்டின் தலைவருக்கு அளிக்கப் பட்டது போல இல்லை. மாறாக சக்கரவர்த்தி ஒருவருக்கு குறுநில மன்னர் வளைந்தும், குழைந்தும், நெளிந்தும், குனிந்தும் அளித்த வரவேற்பு போலவே அமைந்தது. இத்தகைய இழிவுகள் ஒருபுறமிருக்க ஏகாதிபத்தியத்திடம் நம்முடைய நாட்டின் நலனையும், இறையாண்மையையும் மோடி அரசு அமெரிக்காவிடம் அடகு வைக்க துணிந்து விட்டது. அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு மேற்கொள்ள முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுமுயன்றதை இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தன.அதையும் மீறி மன்மோகன் சிங் அரசு உடன்பாட்டில் கையெழுத்திட முயன்றபோது ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டன. எனினும் 2010ல் இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கையெழுத்தானது.
அமெரிக்க நிறுவனங்கள் நிறுவும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை யார் வழங்குவது என்பது குறித்து சர்ச்சை நீடித்து வந்தது. அமெரிக்க நிறுவனங்கள்தான் வழங்க வேண்டும் என்று இருந்ததை மாற்றி இந்தியாவின் தலையில் அதற்கான பொறுப்பை சுமத்தியுள்ளதுதான் ஒபாமா வருகையால் விளைந்துள்ளகேடாகும். இந்த சரணாகதி ஒப்பந்தத்தைத்தான் மோடி அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. வெட்கமில்லாமல் சில பத்திரிகைகளும் மோடியும் ஒபாமாவும் ஒருநாள் பேச்சுவார்த்தையிலேயே இதை சாதித்துவிட்டதாக எழுதுகின்றன. இந்தியாவின் கூட்டுச்சேரா கொள்கை அடிப்படையிலான அயல்துறை கொள்கையை மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவி வருகிறது. இதில் அடுத்த கட்டமாக பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா என்ற முக்கோணம் உருவாக்கப் பட்டுள்ளது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் உலக அரங்கில் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்கா விரித்த வலையில் நம்முடைய நாட்டை மோடி சிக்க வைத்திருக் கிறார்.பெரும்பாலும் அமெரிக்க பொருட்களை வாங்குவதற்காக 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு கடன் தர ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்று முழங்கிக்கொண்டு மறுபுறத்தில் அமெரிக்க சரக்குகளை வாங்க அவர்களிடமே கடன் வாங்குகிறது மோடி அரசு. இதுதான் அவரின் ராஜதந்திர லட்சணம். மொத்தத்தில் ஒபாமா தனது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக்கொண்டு விமானம் ஏறிவிட்டார். மோடியோ அடுத்து என்ன உடை உடுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

No comments: