கிங் ஃ பிஷர் நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது சன் குழுமத்தின் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் தங்களது விமானச் சேவைகளை நிறுத்தத் துவங்கியுள்ளது. 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதன் மொத்தக் கடன் ரூ. 1459 கோடி எனவும் சொல்லப்படுகிறது. பெரும்பாலான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. தினசரி விமானங்களை இயக்க தனக்கு 2000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது.ரூ.600 கோடி வரை பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கிட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு இதே மாதிரி கடன் வழங்கிய வகையில் ரூ. 7 ஆயிரம் கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. விஜய் மல்லையாவின் மற்ற தொழில்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஏன் திரும்பச் செலுத்தவில்லை என்று மத்திய அரசும் கேட்கவில்லை. மாறாக பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன்களை வசூலிப்பதில் பின் தங்கியிருப்பதாக மத்திய அரசு சொல்லி வருகிறது. தற்போது சன் குழுமம் தொலைக்காட்சி, ரேடியோ, வாரப்பத்திரிக்கை, நாளிதழ்கள், சினிமா, ஐபிஎல் கிரிக்கெட் என பல்வேறு வழிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை லாபமாக சம்பாதித்து வருகிறது.அதிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஆசியாவிலேயே அதிக லாபமீட்டும நிறுவனம் சன் குழுமம்தான். அதிலிருந்து ஒரு பைசா கூட எடுத்து ஸ்பைஸ் ஜெட்டிற்கு நிதியைப் போட முன்வரவில்லை. ஏனெனில் ஏற்கனவே கிங் ஃபிஷர் வழிகாட்டியுள்ளது. அப்போது காங்கிரஸ் அரசு துணை போகிறது. இப்போது பாஜக அரசு துணை போகிறது. ஆளுகின்ற வர்க்கம் மாறினாலும், கொள்கைகள் மாறவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.நம்முடைய வருத்தமெல்லாம், இம்மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், தனியார் வங்கிகளையோ, பன்னாட்டு வங்கிகளையோ கடன் வழங்க அறிவுறுத்துவதில்லை.ஏனெனில் அந்த வங்கிகளில் உள்ள முதலீடுகள் அனைத்துமே பெரும் செல்வந்தர்களுடையது. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் உள்ள பணம் சாதாரண மக்களுடைய சேமிப்பு. “உன் பணம் என் பணம்... என் பணம் என் பணம்...” என்கிற கார்ப்பரேட்டுகளால் இன்னும் எத்தனை வழிகளிலெல்லாம் சாமானிய மக்களின் பணம் போகப் போகிறதோ தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைப் பசிக்கு இன்னும் எவ்வளவுதான் தீனி போடுவது? இவ்வளவு கொடுத்தாலும் முதலாளித்துவத்தின் பசிக்குத் தீனி போட முடியாது. அசையாமல் தின்னும் யானைகள் அவர்கள். யானைகளை அடக்கும் பாகர்களாக நம்முடைய ஆளும் வர்க்கத்தை மாற்றுவது நம்முடைய கைகளிலேயே உள்ளது . . . . .நன்றி: சங்கக்குரல்
No comments:
Post a Comment