Monday 19 January 2015

50 ஆண்டு 1000 மடங்கு நிதி: LIC.,யின் 'மலரும் நினைவுகள்...'

இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். 1956 ஜன.,19 ல் மத்திய அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியது.இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு இன்சூரன்ஸ் வணிகம் செய்தது தனியார் நிறுவனங்கள் தான். பல நிறுவனங்கள் இந்தியர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய மறுத்தன அல்லது கூடுதலாக 'பிரிமியம்' வசூலித்தன.இந்தியாவில் பிறதொழில்கள் துவங்க விரும்பியோர் அதற்கான முதலீடு தேவையெனில் முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தான் துவங்கினர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட சுதேசியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்கினர்.
பாலிசிதாரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பாலிசி பதிவு செய்யாமல் இருப்பது, இறப்புக்கு பின் உரிய இழப்பீடு வழங்காதது, கம்பெனியை திவாலாக்குவது என ஊழல் மலிந்த துறையாகவும் இருந்தது.1956 வரை 250தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. 1956 லேயே இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான சங்கம் துவக்கப்பட்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தன. மும்பை போராட்டத்தின் முதல் தீர்மானமே 'இந்திய இன்சூரன்ஸ் துறையை தேச உடைமையாக்க வேண்டும்' என்பது தான்.சுதந்திரத்திற்கு பின் முதல் பார்லிமென்ட் கூட்டம் நேரு தலைமையில் நடந்தபோது இன்சூரன்ஸ் ஊழல் பற்றி தான் விவாதிக்கப் பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பார்லிமென்டில் பேசும் போது,' கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்டதை விட பல வழிகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன' என்று குறிப்பிட்டார்.அவசர சட்டம் :19.01.1956 இரவு 8.30 மணிக்கு அப்போதைய நிதியமைச்சர் தேஷ்முக், ரேடியோ மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். 'மறுநாள் காலையிலேயே அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. 1956 செப்., 1-ல் தான் 'இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்' முறையாக துவங்கப்பட்டது.கடைக்கோடி மனிதனுக்கும் காப்பீடு; மக்கள் சேமிப்பை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்துவது; தனியார் நிறுவனங்களை ஆயுள் காப்பீட்டில் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்தது. 1972-ல் வங்கி, எண்ணெய், பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.வரலாறு மாறியது :1999 ல் வாஜ்பாய் அரசு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதாவை நிறைவேற்றியது. அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா 'இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது; அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் ஆக்குவது' என தெரிவித்தார்.தற்போது மீண்டும் 49 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை பா.., அரசு அமல்படுத்தி உள்ளது. எல்..சி., தலைவர் எஸ்.கே.ராய், நிலைக்குழுவின் முன் ஆஜராகி 'இன்சூரன்ஸ் துறையில் உலகளவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே நிறுவனம் எல்..சி., தான்' என தெரிவித்துள்ளார்.'அன்னிய நிறுவனங்கள் உள்ளே வந்தால் புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்கும்; பிரிமியம் விலை குறையும்' என காரணங்கள் கூறப்பட்டன. இவை எதுவுமே இன்றுவரைநடக்கவில்லை. 10 ஆண்டுகளில் உலகளாவிய பெரிய நிறுவனங்கள் இத்துறையை விட்டே ஓடிவிட்டன. எனவே அன்னிய நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்திற்கும் இந்திய மக்களுக்கும் உகந்தவர்களாக செயல்பட முடியாது.பென்ஷன், சுகாதாரம் குறித்த திட்டங்களில் சுளையாக லாபம் பார்க்க நினைப்பதால் தான் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நினைக்கின்றனர்.உலகிலேயே இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சேவைவரி விதித்த ஒரே நாடு இந்தியா தான். தற்போது முதிர்வுத் தொகைக்கு வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் முதல் கடமை சேவைவரியையும், முதிர்வுத் தொகை மீதான வரிவிதிப்பையும் ரத்து செய்வது தான். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நேஷனல், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல், யுனைடெட் இந்தியாவை ஒன்றாக்கி வலிமையான பொதுத்துறை நிறுவனமாக மாற்ற வேண்டும்.ஐந்து கோடி முதலீடு:எல்..சி., துவக்க 1956ல் அரசுக்கான முதலீடு வெறும் ஐந்து கோடி ரூபாய் தான். ஆனால் 1961 ல் முடிந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் அரசுக்கு எல்..சி., கொடுத்த நிதி உதவி ரூ.184 கோடி. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல்ஆண்டில் அரசுக்கு எல்..சி., வழங்கியது மட்டும் ரூ. ஒரு லட்சத்து 84ஆயிரம் கோடி.'2ஜி' ஊழலைப் பற்றி பேசும் போது தான் இதன் மதிப்பு புரியும். 50 ஆண்டு கால வளர்ச்சியில் ஆயிரம் மடங்கு அளவிற்கு அரசுக்கு நிதியுதவி அளித்த வரலாறு உலகளவில் எல்..சி.,க்கு மட்டுமே சாத்தியமானது.தேச வளர்ச்சி ஆயுள் காப்பீட்டில் பிரதிபலிக்கிறது. ஆயுள் காப்பீட்டின் வளர்ச்சி, தேச வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது...-என்.சுரேஷ்குமார்,பொதுச் செயலாளர்,(AIIEA)காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்-94430 40768.

No comments: